ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும், மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து அவர், “அப்பாவி இந்தியர்களைக் கொல்வது பாகிஸ்தானின் தேசிய விளையாட்டாகத் தெரிகிறது. இந்தியா மட்டைகளாலும் பந்துகளாலும் அல்ல. மாறாக, சகிப்புத்தன்மையுடன் பதிலளிக்க வேண்டும். இனி, எப்போதுமே இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம்” எனத் தெரிவித்திருந்ததுடன், பிசிசிஐக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இதுதொடர்பாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், ”இனி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எந்த இருதரப்பு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாது” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. மேலும் இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஆனால், ஐசிசி நிகழ்வைப் பொறுத்தவரை, ஐசிசி ஈடுபாட்டின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பது ஐசிசிக்குத் தெரியும்" என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் ஒரே இடமாக ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களாக மட்டுமே இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தது. அதேபோல், ஐசிசி சார்பில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியா வந்தது. எனினும், நடப்பாண்டு பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா அங்கு போய் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.