hardik pandya PT
T20

1 பந்துக்கு 4 ரன் தேவை.. CSK பவுலர் வீசிய 1 ஓவரில் 29 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா! த்ரில் வெற்றி!

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது பரோடா அணி.

Rishan Vengai

2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியானது கடைசி பந்துவரை சென்று பரபரப்பான முடிவை எட்டியது.

1 பந்துக்கு 4 ரன் தேவை.. பரபரப்பாக முடிந்த போட்டி!

க்ருணால் பாண்டியா தலைமையிலான பரோடா அணி மற்றும் ஷாருக் கான் தலைமையிலான தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 221 ரன்கள் குவித்து மிரட்டியது. தமிழ்நாடு அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் 150 ஸ்டிரைக்ரேட்டுக்கு மேல் ரன்னடித்து அசத்தினர்.

222 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி விளையாடிய பரோடா அணி கடினமான ரன் துரத்தலை கொண்டிருந்தது. ஆனால் 6வது வீரராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, குர்ஜப்நீத் சிங் (Gurjapneet Singh) என்ற பவுலர் அடித்த ஒரே ஓவரில் 29 ரன்கள் அடித்ததன் மூலம் 20 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 7 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என விளாசி 30 பந்துக்கு 69 ரன்கள் குவித்தார்.

ஆனால் முக்கியமான நேரத்தில் ஹர்திக் பாண்டியாவை ரன் அவுட் செய்த விஜய் சங்கர், தமிழ்நாடு அணியை ஆட்டத்திற்குள் மீண்டும் எடுத்துவந்தார். இறுதிவரை சென்ற போட்டி கடைசி 1 பந்துக்கு 4 ரன்கள் தேவை என்ற பரபரப்பான இடத்திற்கு நகர்ந்தது.

இறுதிபந்தில் 3 ரன்கள் அடித்தால் சூப்பர் ஓவர், பவுண்டரி அடித்தால் வெற்றி 2 ரன்கள் என்றால் கூட தமிழ்நாடு வெற்றி என்ற பரபரப்பில் இறுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அதிட் ஷெத் பரோடா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இரண்டாவது மிகப்பெரிய ரன் சேஸை செய்த பரோடோ அணியில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.