வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேசம் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் 1-1 என சமன்செய்யப்பட்ட நிலையில், அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளையும் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வெற்றிபெற்று வங்கதேசம் வரலாறு படைத்துள்ளது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங்செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டு வெளியேறினர்.
ஆனால் ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மூத்த வீரர் சௌமியா சர்கார் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் சேர்த்து காப்பாற்றினார். இறுதியாக வந்த மகதி ஹாசன் 26, ஷமிம் ஹொசைன் 27 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எட்டியது வங்கதேசம்.
எப்படியும் எளிதாக வெஸ்ட் இண்டீஸ் இந்த இலக்கை எட்டிவிடும் என நினைத்தபோது, கடைசிவரை போராடிய வங்கதேச அணி மகதி ஹாசனின் அபாரமான சுழற்பந்துவீச்சு காரணமாக 7 ரன்களில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. சிறப்பாக பந்துவீசிய ஹாசன் 4 ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து முதல் டி20 போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேசம்.