இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவர்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா, 396 ரன்கள் குவித்தது. சதம் விளாசிய ஜெய்ஸ்வால், 118 ரன்கள் எடுத்தார். ஆகாஷ் தீப் (66), ரவீந்திர ஜடேஜா (53), வாஷிங்டன் சுந்தர் (53) ஆகியோர் அரைசதம் விளாசினர். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில், நம்பர் 6 அல்லது அதற்குக் கீழான பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்களில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் 474 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 2002-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடியபோது விவிஎஸ் லக்ஷ்மண் இந்தச் சாதனையைப் படைத்தார். தற்போது 23 ஆண்டுக்குப் பின் ஜடேஜா இந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், இந்தத் தொடரில் தனது ஆறாவது 50+ ஸ்கோரைப் பதிவு செய்தார். இதன்மூலம் புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் 59 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தொடரில் 6வது அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்யும் வீரர்களில் அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த சாதனையை சோபர்ஸ் வைத்திருந்தார். அதையும் தற்போது ஜடேஜா முறியடித்துள்ளார். அதேபோல், இங்கிலாந்தில் ஒரு தொடரில் அதிக 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையையும் ஜடேஜா முறியடித்தார். அவர், 5 அரைசதங்கள் அடித்திருந்தார்.
இந்தத் தொடரில் இந்தியாவின் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக ஜடேஜா ஐந்து போட்டிகளில் 517 ரன்கள் எடுத்தார். இது வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 6வது இடத்தில் அல்லது அதற்குக் கீழே உள்ள எந்த வீரராலும் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிக ரன்கள் ஆகும். 1966ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 722 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் முதல் இடத்தில் உள்ளார். 517 ரன்களுடன் பாகிஸ்தான் வீரர் வாசிம் ராஜா 2வது இடத்தில் உள்ளார்.