IND V ENG Test.. கிரிக்கெட்டில் பேசுபொருளான ட்யூக்ஸ் பந்து.. பவுலர்கள் குமுறல்!
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் பேட்டர்கள் குவிக்கும் ரன்களும் பவுலர்கள் எடுக்கும் விக்கெட்டுகளும் பீல்டர்களின் கேட்சுகளும் வெகுவாக பேசப்படும். ஆனால் இம்முறை பந்து பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடர் ஆடி வரும் நிலையில் அதில் பயன்படுத்தப்படும் ட்யூக்ஸ் (DUKES) ரக பந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பந்து மிக விரைவாகவே அதன் உருண்டை தன்மையை இழந்துவிடுவதாகவும் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடிவதில்லை என்றும் புகார்கள் உள்ளன. பந்து மோசமாகிவிடுவது குறித்து 2 அணி வீரர்களுமே புகார் கூறி வருகின்றனர்.
இது குறித்து அம்பயரிடம் இந்திய அணி கேப்டன் கில் ஆடுகளத்திலேயே கடுமையாக வாதிட்டார். துணை கேப்டன் ரிஷப் பந்த்தும் பந்து குறித்து குறைகூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் திலீப் ஜஜோடியா, பந்து அதன் தன்மையை இழப்பதற்கு வெளிப்புற காரணங்கள் இருக்கலாம் என்கிறார். தற்போது பிரிட்டனில் வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் உள்ளது... பேட்டர்கள் தற்போது கனமான பேட்டை பயன்படுத்துகின்றனர். எனினும் இவற்றையெல்லாம் தாக்குப்பிடித்து பந்து நீடித்து உழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்கிறார் திலீப் ஜஜோடியா.