bhanuka rajapaksa criticize indian players bat
விளையாட்டு

’இந்திய வீரர்களுக்கு திறமை இல்லை; அவர்கள் BAT-ல் ரப்பர் உள்ளது’ - இலங்கை வீரர் குற்றச்சாட்டு

இந்திய வீரர்கள் சிறப்பாக ஆட காரணம் அவர்களின் திறமை அல்ல, அவர்களின் பேட்தான் என இலங்கை அணி வீரர் குற்றம் சாட்டியுள்ளார்.

Praveen Joshva L

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் திறமைக்கு அவர்களின் பேட்கள் முக்கிய காரணம் என இலங்கை வீரர் பனுக்கா ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அவர், இந்திய வீரர்களுக்கு சிறப்பான பேட்கள் கிடைக்கின்றன, மற்ற நாடுகளின் வீரர்கள் அவற்றை வாங்க முடியாது எனவும், பேட்களில் ரப்பர் அடுக்கு இருப்பது போல் உணர்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய கிரிக்கெட்டில் இருபது ஓவர் போட்டிகளில் உலகமே அஞ்சும் அணியாக இந்திய கிரிக்கெட் அணி திகழ்ந்து வருகிறது. ஆடும் 11 பேர் தவிர வேறு 11 வீரர்களை மற்றொரு அணியாக உலககோப்பைக்கு அனுப்பினால் கூட அந்த அணியும் அரையிறுதி வரை முன்னேறும் திறமை கொண்டது என உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அபிஷேக் சர்மா

எதிரணி 300 ரன்களை குவித்தால் கூட அதனை வெற்றிகரமாக துரத்தும் அளவு இந்திய பேட்டிங் வலுவாக உள்ளது. ஆனால், இந்திய வீரர்களின் இந்த திறமைக்கு அவர்களின் பேட்தான் காரணம் என இலங்கை அணியின் சர்வதேச வீரர் பனுக்கா ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அணியின் வீரரான பனுக்கா ராஜபக்ச உலகின் பல்வேறு லீக் தொடர்களிலும் ஆடியுள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவர் சமீபத்தில் நியூஸ்வைர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு பவர்-ஹிட்டிங் விளையாட்டை மாற்றியுள்ளனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நமக்குக் கிடைக்கும் சிறந்த பேட்களை விட இந்திய வீரர்களுக்கு சிறப்பான பேட்கள் கிடைக்கிறது. அந்த பேட்களை பிற நாட்டு வீரர்களால் வாங்க முடியாது என்றும் இது அனைத்து வீரர்களுக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் பேட்களின் மேற்பரப்பில் ரப்பர் அடுக்கு பூசப்பட்டிருப்பது போல் உணர்கிறேன். ஆனால், அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு சமூக இணையதளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்திய வீரர்கள் தங்கள் பேட்களை பிற வீரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் தவறு செய்திருந்தால் இப்படி தங்கள் பேட்களை பிறருக்கு கொடுக்க மாட்டார்களே என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.