France VS Spain Spain beat France Again
விளையாட்டு

பிரான்ஸை விட நாங்கதான் சிறந்த அணி: 3-வது முறையாக நிரூபித்த ஸ்பெயின்.. 2010 மாயம் மீண்டும் நடக்குமா ?

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணியை வீழ்த்தி தாங்களே அவர்களை விட சிறந்த அணி என்பதை ஸ்பெயின் மீண்டும் நிரூபித்துள்ளது.

Praveen Joshva L

ஃபிபா உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்னரே கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் அணி கணிக்கப்பட்டது . சில ஆண்டுகள் என்று இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாகவே மேலாளர் டெஸ்சாம்ப்ஸ்-ன் கீழ் பிரான்ஸ் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2018-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி 2022 உலககோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அர்ஜென்டினா அணியிடம் கோப்பையை இழந்தது. எனினும் நடப்பு உலககோப்பைக்கு கடந்த முறையை விட பலம் வாய்ந்த அணியாக பிரான்ஸ் களமிறங்கியது.

அந்த அணியில் எம்பாப்பே, பாலன் டி ஓர் விருதை வென்ற டெம்பெலே, பார்கோலா, ஒலிசே, டூயே, சுவாமேனி, ரேபியாட், துராம், என போட்டியை தனியாளாக மாற்றும் நட்சத்திர வீரர்கள் களமிறங்கினர். மேலும் அந்த அணியின் மாற்று வீரர்களாகவும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள்.

இதனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னரே கோப்பை பிரான்ஸ் அணிக்குதான் என பலரும் ஆருடம் கூறினர். அந்த வகையில் முதல் போட்டியில் இருந்தே பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக ஆடி சுலபமாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் மட்டும் 16 கோல்களை பிரான்ஸ் அணி அடித்து அசத்தியது. அதிலும் அந்த அணியின் முன்கள வீரர்களான எம்பாப்பே 8 கோல்களையும், டெம்பெலே 5 கோல்களையும் அடித்து அசத்தினர்.

அதே போல நாக் அவுட் போட்டிகளில் பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட வாங்காமல் அரையிறுதிக்கு வந்ததால் அந்த அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

ஆனால், தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பிரான்ஸ் அணியை ஒரு அணியால் வீழ்த்தமுடியும் என்றால் அது ஸ்பெயின் அணியால் மட்டுமே முடியும் என்ற பல்வேறு கால்பந்து நிபுணர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். ஏனெனில் கடந்த 2024 யூரோ அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி பிரான்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய நாடுகள் மோதும் நேஷன்ஸ் லீக் தொடரிலும் ஸ்பெயின் அணி பிரான்ஸ் அணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தியது.

Spain 2024 Euro Champions

அதே போல ஸ்பெயின் அணி இந்த தொடரில் ஒரே ஒரு கோல் மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. அந்த ஒரு கோலும் கடந்த காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி அடித்ததாகும். இதனால் ஸ்பெயின் அணியும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே கருதப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் இறுதிப்போட்டிக்கு இணையானதாக கருதப்பட்ட முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பத்தில் இருந்தே ஸ்பெயின் அணி போட்டியை தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தது. வழக்கமாக பிரான்ஸ் அணி எதிரணியின் கோல் கம்பத்தை தொடர்ந்து முற்றுகையிட்டு தொடர் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்த முறை ஸ்பெயின் கோல் பகுதிக்கு செல்வதற்கே பிரான்ஸ் அணி திணறியது.

இது ஒரு பக்கம் இருந்தால் வழக்கமாக தற்காப்பு ஆட்டம் ஆடும் ஸ்பெயின் அணி இந்த முறை பிரான்ஸ் அணிக்கு இணையாக தாக்குதல் ஆட்டமும் ஆடி இருந்தது. இதற்கு ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஒயர்சபால் கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் இரண்டாம் பாதியில் 58-வது நிமிடத்தில் ஓல்மா கொடுத்த அற்புதமான பாஸை பெட்ரா போரோ கோலாக்க ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. எனினும் எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற இடத்தில் இருந்து அர்ஜென்டினா போட்டியை வென்றதுபோல பிரான்ஸ் அணியும் மாயம் நிகழ்த்தும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கு ஏற்ப சில கோல் வாய்ப்புகளை பிரான்ஸ் அணி உருவாக்கியபோதும் அது கோலாக மாறாத படி ஸ்பெயினின் தற்காப்பு மிக உறுதியாக இருந்தது. இறுதியில் நடுவர் விசில் ஊத ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடும் பிரான்ஸ் அணியின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதே போல தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணியை வீழ்த்தி தாங்களே அவர்களை விட சிறந்த அணி என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது.

Spain 2010 Champions

நாளை இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் வெற்றிபெறும் அணி வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஸ்பெயின் அணி ஏற்கனவே 2008-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்று தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையையும் வென்றது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டு யூரோ கோப்பையை ஸ்பெயின் அணி வென்றுள்ள நிலையில், 2026 உலககோப்பையையும் அந்த அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவே தற்போதுவரை பார்க்கப்படுகிறது.