Gujarat Titans players in the Indian squad Gill Dominace
விளையாட்டு

இது இந்திய அணியா? GT அணியா? கில் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இந்திய அணி கேப்டன் கில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்திய அணியில் 7 குஜராத் டைட்டன்ஸ் வீரர்களை எடுத்துள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Praveen Joshva L

ஆப்கானிஸ்தான் எதிரான டெஸ்டுக்கான இந்திய அணியில், குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் ஏழு பேர் இடம் பெற்றது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இளம் கேப்டன் சுப்மான் கில் தனது ஐபிஎல் கூட்டாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுகிறது. குறிப்பாக, ரஞ்சி தொடரில் சிறந்து விளங்கிய ஆகிப் நபி புறக்கணிக்கப்பட்டு, டெஸ்டில் பலமுறை தோல்வியடைந்த பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பரபரப்பாக நடந்த ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெறும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் பட்டியலில் ஐபிஎல் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 7 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார், மனவ் சுதர் ஆகிய 7 பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு அணியின் கேப்டன் தனக்கு சாதகமான வீரர்களை அணியில் எடுப்பது வழக்கம். முன்னர் இந்திய அணி கேப்டனாக இருந்த தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்கள் ஐபிஎல் அணியில் ஆடும் தங்களுக்கு சாதகமான வீரர்களை அணியில் எடுத்து இருந்தனர்.

ஆனால், அப்படிபட்ட ஜாம்பவான் கேப்டன்கள் கூட அதிகபட்சம் 4,5 வீரர்களை மட்டுமே அணியில் எடுத்துள்ளார்கள். இந்த சூழலில் இளம் கேப்டனான சுப்மான் கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ஐபிஎல் அணியில் ஆடும் 7 பேரை இந்திய அணியில் எடுத்துள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Troll post

இந்திய அணியில் கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் ஆகியோரின் தேர்வு குறித்து எந்த விமர்சனமும் பெரிய அளவில் எழவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் பிரசித் கிருஷ்ணாவின் தேர்வுபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த சில ரஞ்சி தொடர்களில் பெரும் சாதனை படைத்துள்ள காஷ்மீரின் ஆகிப் நபியை அணியில் எடுக்காமல், அவரை விட சுமாரான பங்களிப்பையே வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார் ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடுவதாலேயே இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.