ரிஷப் பண்ட் எக்ஸ் தளம்
விளையாட்டு

ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உயிரைக் காப்பாற்றிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் உயிருக்கு போராடி வருகிறார்.

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக விளையாடி வருபவர் ரிஷப் பண்ட். இவர், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பியபோது விபத்தில் சிக்கினார். இவருடைய கார் சாலையின் தடுப்பில் மோதி நிலைகுலைந்தது. அந்த காரை, ரிஷப் பண்ட்டே ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில், துரிதமாக செயல்பட்டவர் ரஜத் என்ற இளைஞர். தற்போது இந்த இளைஞர் காதல் தோல்வியில் விஷம் குடித்ததற்காக உயிருக்குப் போராடி வருகிறார்.

ரிஷப் பண்ட்

முசாபர் நகரின் ஷகர்பூரில் அமைந்துள்ள மஸ்ரா புச்சா பஸ்தியைச் சேர்ந்த ரஜத், மனு என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலர்களாக வலம் வந்துள்ளனர். ஆனால், அவர்களுடைய காதலை இரு குடும்பத்தினரும் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. தவிர, இரு குடும்பத்தினரும் வேறு இடங்களில் வரன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காதலர்கள், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி விஷம் அருந்தியுள்ளனர். உயிருக்குப் போராடிய அவர்கள் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், காதலி மனு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், ரஜத் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. என்றாலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட், பல மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியுள்ளார். பின்னர் தன் உயிரைக் காப்பாற்றிய ரஜத்துக்கு ஸ்கூட்டர் ஒன்றை ரிஷ்ப் பரிசாக அளித்து நன்றி தெரிவித்தார். ரிஷபிடமிருந்து ஒரு ஸ்கூட்டரைப் பரிசாகப் பெற்ற பிறகு ரஜத் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.