indian players x page
விளையாட்டு

ஒரேநாளில் கோலியை பின்னுக்குத் தள்ளிய ரிஷப் பண்ட்| ரோகித் சர்மாவை முந்திய ஸ்ரேயாஸ்.. எதில் தெரியுமா?

அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை ரிஷப் பண்ட் பின்னுக்குத் தள்ளினார்.

Prakash J

விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளிய ரிஷப் பண்ட்

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும்25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், 182 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான ரூ.27 கோடிக்கு வாங்கியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியால் ரூ.26.75 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியால் ரூ.23.75 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதன்மூலம், அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை ரிஷப் பண்ட் பின்னுக்குத் தள்ளினார். 2023-24 பிசிசிஐயின் வருடாந்திர வீரர்களை தக்கவைத்துக்கொள்வதில் கிரேடு பி பிரிவில் உள்ள பண்ட், ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். தற்போது அவர் ஐபிஎல்லில் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதன்மூலம், இனி, ஆண்டுக்கு ரூ.30 கோடியை வருமானமானப் பெறுவார். இது, நட்சத்திர வீரருக்குரிய சம்பளமாகப் பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மாவைப் பின்னுக்குத் தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர்

முன்னதாக, கிரேடு ஏவில் இருந்த ரிஷப் பண்ட், கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்துக்குப் பிறகு அவருடைய கிரேடு பி ஆக உள்ளது. என்றாலும், அடுத்த மார்ச் மாதம் BCCI புதிய ஒப்பந்தப் பட்டியலை அறிவிக்கும்போது, ​​அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியில் அவரது குறிப்பிடத்தக்க பங்கைக் கருத்தில்கொண்டு அவர் மீண்டும் ஏ கிரேடுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களில் போட்டிகள் மூலமாக அதிக வருமானம் ஈட்டும் வீரராக ரிஷப் பண்ட் உயர்ந்துள்ளார். முன்னதாக, ஐபிஎல் தொடர் மூலமாக விராட் கோலி ரூ.21 கோடியும், பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ரூ.7 கோடியும் வருமானம் ஈட்டி வருகிறார்.

இதன்மூலமாக விராட் கோலி கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மொத்தம் ரூ.28 கோடி வருமானம் ஈட்டி வந்தார். இதை, தற்போது முறியடித்து ரிஷப் பண்ட் முன்னேறிச் சென்றுள்ளார். மேலும் வரும் காலங்களில் ஏ கிரேடுவில் ரிஷப் பண்ட் இணைந்து, அவரது ஊதியம் உயரும் பட்சத்தில் இன்னும் அதிகம் சம்பாதிக்கும் வீரராக இவர் கருதப்படுவார். மறுபுறம், ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலியைத் தொடர்ந்து அதிகம் சம்பாதிக்கும் வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்துள்ளார். அவரை, பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் இந்த தொகை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை என்றாலும், ரோகித் சர்மாவை விடவும் அதிக ஊதியம் பெறும் வீரராக உயர்ந்துள்ளார். ரோகித் சர்மா ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.16.30 கோடியும், பிசிசிஐ ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடியும் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.