விளையாட்டு

தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்!

தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்!

webteam

இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக கேப்டான இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். இதனால், இந்திய- இலங்கை மோதிய ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் அந்த அணி படு தோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா நீக்கப்பட்டார். 

(சண்டிமால்)

இதையடுத்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய மேத்யூஸை மீண்டும் கேப்டனாக நியமித்தனர். இதுபற்றி மேத்யூஸ் கூறும்போது, ‘இலங் கை கிரிக்கெட் வாரிய தலைவரும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹதுருசிங்காவும் பேசினர். என் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார். 

இவர் தலைமையிலும் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் லீக் போட்டியிலேயே அந்த அணி வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, டெஸ்ட் அணி கேப்டன் சண்டிமால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.