விளையாட்டு

கோலிக்காகத்தான் விட்டுக்கொடுத்தேன் ! மனம் திறந்தார் தோனி

கோலிக்காகத்தான் விட்டுக்கொடுத்தேன் ! மனம் திறந்தார் தோனி

இந்தியாவுக்கு உலகக் கோப்பை உள்பட பல்வேறு கோப்பைகளை வாங்கிக் கொடுத்த பெருமை கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனிக்கே சேறும். தோனி கேப்டனாக கோலோச்சிய காலத்திலேயே அதாவது 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை ஏற்கும் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். அதற்கு முன்பாகவே 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி  விலகினார்.

பின்பு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். தோனி பதவியில் இருந்து விலகியதற்கு பிசிசிஐ நிர்பந்தம் காரணம் என கூறப்பட்டது. தோனியும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறாமல் இருந்தார். செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று துபாய் புறப்பட்டது.

ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது முதல் முறையாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல் முறையாக மனம் திறந்து பேசினார் அவர் "2019 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்க புதிய கேப்டனுக்கு போதிய அவகாசம் வழங்குவதற்காக எனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தேன் (கோலி). புதிய கேப்டனுக்கு உரிய காலம் வழங்காமல் வலுவான அணியை உருவாக்குவது சாத்தியமற்றது. அதனால், சரியான நேரத்தில் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினேன். அணியின் நன்மைக்காகவே இதைச் செய்தேன்" என தோனி கூறினார்.

மேலும் இங்கிலாந்தில் சமீபத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய தோனி " இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி பயிற்சிப் போட்டிகளை தவறவிட்டது. அதனால் தான், சூழ்நிலைக்கேற்ப தங்களை பொருத்திக் கொள்ள  பேட்ஸ்மேன்கள் திணறினர். இதுதான் தோல்விக்கு காரணம். தோல்வியும் விளையாட்டின் விளையாட்டின் ஒரு பகுதி. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தற்போது முதலிடம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" என்றார் அவர்.