[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டது யார்?

who-helped-to-escape-vijaya-mallaya

லண்டனில் பதுங்கியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உதவியது எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் லண்டனுக்கு தப்பிச் செல்லும் முன் விஜய் மல்லையா நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து உரையாடினார் என்று புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளனர் சிலர். 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி எல் புனியா 2016ஆம் வருடம் மார்ச் மாதம் 1ஆம் தேதி அருண் ஜெட்லியும் விஜய் மல்லையாவும் நீண்ட நேரம் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள் என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் இந்த உண்மை வெளிப்படும் என்றும் என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த புனியா, கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது அருண் ஜெட்லி-மல்லையா சந்திப்பு குறித்த தனது தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று சவால் விடுத்தார். அதே சமயத்தில் அருண் ஜெட்லியும் விஜய் மல்லையாவும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது உண்மை என உறுதி செய்யப்பட்டால் அருண் ஜெட்லி அரசியலை விட்டு விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

2016ஆம் வருடம் மார்ச் இரண்டாம் தேதியன்று மல்லையா டெல்லியிலிருந்து விமானம் மூலம் லண்டன் தப்பி சென்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, விஜய் மல்லையா விவகாரத்தில் முழு விசாரணை நடைபெற வேண்டும். அதுவரை அருண் ஜெட்லி நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக லண்டனில் நேற்று சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி இன்று பேசும்போது அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் விஜய் மல்லயா லண்டன் தப்பினார் எனக் குற்றம் சாட்டினார். அருண் ஜெட்லி, இந்தத் தகவலை சிபிஐ, அமலாக்கத்துறைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

பஜக தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது சகஜம்தான் என விளக்கம் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், விஜய் மல்லையாவை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தற்செயலாக சந்திப்பு நடந்தது என்றும் கூறியுள்ளார். விஜய் மல்லையா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு காட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்நிலையில்தான் பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா இன்று செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் விஜய் மல்லையாவுக்கு தொடர்ந்து உதவி செய்தார்கள், அவரிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

இப்படி இரண்டு தேசிய கட்சிகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவது டெல்லி அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகியுள்ளது. அதே சமயத்தில் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து லண்டன் சென்றபோது அவரை தடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது? அவருக்கு எதிராக சிபிஐ அளித்திருந்த லுக்அவுட் நோட்டீஸ் அவரை வெளிநாடுகளுக்குச் செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாற்றப்பட்டு சிபிஐக்கு தகவல் அளித்தால் மட்டும் போதுமானது என தரம் குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது? 

விஜய் மல்லையாவுக்கு உதவி செய்தது யார்? தொடர்ந்து வங்கிகளிடமிருந்து அவர் கடன் வாங்க எப்படி முடிந்தது? சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்து அவர் எப்படி லண்டனுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பதிலளிக்க வேண்டிய பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருவதால் இப்பிரச்னை பெரும் சிக்கலாக வெடித்துள்ளது. இதனையடுத்து வரும் நாட்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து தாக்கிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். 

அதே சமயத்தில் விஜய் மல்லையா, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார்; அதனால்தான் அவர் வெளிநாடு சென்றபோது தடுக்கப்படவில்லை என்று சிபிஐ தரப்பு விளக்கம் அளித்து கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் வருகிறது. ஒருவேளை விஜய் மல்லையா லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தால், பின்னர் நடக்கும் விசாரணையில் பல உண்மைகள் தெரியவர வாய்ப்பு இருக்கிறது. விஜய் மல்லையா இந்தியாவுக்கு திரும்ப வருவாரா? லண்டன் நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்கு நிரூபணம் ஆகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close