மெஸ்ஸி ட்விட்டர்
விளையாட்டு

இந்தியாவை ஏமாற்றிய அர்ஜென்டினா, மெஸ்ஸி.. ரூ.250 கோடி திரும்ப வருமா.? பொங்கிய கேரளா அமைச்சர்!

அர்ஜென்டினா அணி இந்தியாவுக்கு வர சம்மதம் தெரிவித்து பல கோடிகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கேரள அமைச்சர் கூறியுள்ளார்.

Praveen Joshva L

கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து காய்ச்சல் உச்சத்தில் இருக்கும் நிலையில், உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கேரளா வருவதாக அறிவிக்கப்பட்டது. 2026 மார்ச்சில் நட்பு போட்டி நடத்த ரூ.250 கோடி திரட்டி ஒப்பந்தம் செய்ததாக கூறிய அமைச்சர் அப்துர் ரஹிமான், கடைசி நேரத்தில் அணி வருகை ரத்து செய்து இந்தியாவை ஏமாற்றியதாக குற்றம்சாட்டுகிறார்.

கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக வரவேற்பு பெற்ற விளையாட்டாக கால்பந்து இருக்கிறது. கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் உள்ள நிலையில், கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கேரள ரசிகர்கள் அளித்த ஆதரவு அர்ஜென்டினா வரை எட்டியது. அதைத் தொடர்ந்து இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வரும் என தகவல் வெளியானது.

அர்ஜென்டினா கால்பந்து அணி

கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருவதை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்ததாக கேரள அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது.

மேலும் 2026-ம் ஆண்டு மார்ச்சில் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடும் என கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர் ரஹிமான் அறிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்த போட்டியும் நடைபெறாத நிலையில், கேரளா வருவதாக அர்ஜென்டினா அணி கூறி ஏமாற்றிவிட்டதாக கேரள அமைச்சர் அப்துர் ரஹிமான் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், அர்ஜென்டினா அணியின் வருகைக்காக ரூ.250 கோடி நிதியும் திரட்டப்பட்டு அர்ஜென்டினா அணிக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அணியின் கேரளம் வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மெஸ்ஸி

மேலும், மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளம் வந்து காட்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து இப்படியொரு துரோகத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், இது தொடர்பாக, நாங்கள் விசாரித்த போது அர்ஜென்டினா அணி இதுபோல் மேலும் சில நாடுகளிடம் பணம் பெற்றுக் கொண்டு விளையாட செல்லாமல் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாகவும், தற்போது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது, அவர்கள் எங்களுக்கு இழப்பீடு தந்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.