jaideep dahiya
jaideep dahiya Haryana Steelers
கபடி

Haryana Steelers | நிறைய ரிஸ்க் சரி... ஆனால் ரஸ்க் கிடைக்குமா..?

Nithish

எல்லா விளையாட்டுகளின் லீக்களிலும் ஒரு அணி இருக்கும். அவர்கள் மேல் அதிக வெளிச்சம்படாது. அவர்களுமே ஆக்ரோஷமான பரபரப்பான ஆட்டத்தை எல்லாம் வெளிப்படுத்தமாட்டார்கள். வருவார்கள், சில சமயம் வெல்வார்கள், சில சமயம் தோற்பார்கள். தொடரின் போக்கோடு தொடர்ந்து பயணித்தபடி இருப்பார்கள். அவ்விளையாட்டின் ரசிகர்களுக்கு தங்கள் அபிமான அணிக்கு அடுத்த இரண்டாவது பேவரைட் டீமாக இருப்பார்கள். உலக கிரிக்கெட் அரங்கில் நியூசிலாந்து, ஐ.பி.எல்லில் சன்ரைஸர்ஸ் என இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அப்படி பி.கே.எல்லைப் பொறுத்தவரை ஹரியானா ஸ்டீலர்ஸ். ஐந்தாவது சீசனில் களம் கண்டதிலிருந்து இரண்டு முறை ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றும் மூன்று முறை தகுதி பெறாமலும் நடையைக் கட்டியிருக்கிறார்கள்.

போன சீசனுக்கு முன்புவரை ஸ்டார் பிளேயரான விகாஷ் கண்டோலாதான் ஹரியானா அணியின் அடையாளமாக இருந்தார். போன சீசன் ஏலத்தில் அவரை பெங்களூருவுக்கு பறிகொடுத்தபின்னர் டீம் ரெய்டிங்கில் அதிகமாகவே தடுமாறியது. போன சீசனில் அவர்களின் லீட் ரைடரான மஞ்சித் 150 பாயின்ட்களைக் கூட தொடமுடியவில்லை. அதனால் இந்தமுறை புதிதாய் ஒரு பலம்வாய்ந்த ரெய்டரை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது அணி நிர்வாகம். சித்தார்த் தேசாயை விரட்டி ஒரு கோடிக்கு வாங்கியதன் காரணம் அதுதான். கூடவே சந்திரன் ரஞ்சித்தையும் ராகுல் சேத்பாலையும் அடிப்படை விலையிலிருந்து மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்கினார்கள். எப்படியாவது இந்தமுறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்கிற அவர்களின் தீர்க்கம் ஏல டேபிளில் தெளிவாகத் தெரிந்தது. விளைவு, அனுபவமும் இளமையும் கலந்துகட்டிய ஒரு அணி.

பலம்

சித்தார்த் தேசாய். பி.கே.எல்லின் பாகுபலி. இவர் ஆறாவது சீசனில் அறிமுகமானபோது அருகே போகவே டிபென்டர்கள் தயங்கினார்கள். ஆறடிக்கும் மேல் உயரம், தடுப்பவர்களை முட்டித் தள்ளும் பலம் என அந்த சீசனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் காரணமாக அடுத்த சீசனில் ஏலத்தில் எக்கச்சக்க டிமாண்ட் அவருக்கு. ஆனால் திடீரென ஒருநாள் காயம்பட, அன்றிலிருந்து தடுமாற்றம்தான். போன சீசனில்தான் ஓரளவு தேறிவந்தார். அதனால் இந்தமுறை விட்டதையெல்லாம் சேர்த்துப்பிடிக்கக் காத்திருப்பார் என நம்பலாம்.

மூன்றாவது ரெய்டராக ஆட வாய்ப்பிருக்கும் வினய், கவர் டிபென்டர்களான ஜெய்தீப் தகியா, மோஹித் நந்தல் இவர்கல் மூவரும் பல சீசன்களாக ஹரியானா அணிக்காக ஆடிவருபவர்கள். மற்றொரு ரெய்டரான பிரபஞ்சனுமே போன சீசனில் ஹரியானாவுக்காக ஆடியவர்தான். இப்படி ஏற்கனவே செட்டான சீனியர்கள் கோர் டீமாக இருப்பதால் திட்டங்கள் வகுப்பது எளிது. தத்தமது பலம், பலவீனம் புரிந்து அதற்கேற்றார்போல ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

பலவீனம்

கார்னர் டிபென்டர்களாக ஒருபக்கம் ராகுல் சேத்பால் இருப்பார். நல்ல டிபென்டர்தான் என்றாலும் போன சீசனில் மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இவருக்கு மாற்று ஆப்ஷன்களாகவும் மற்றொரு கார்னருக்கான ஆப்ஷன்களாகவும் அணியில் இருக்கும் மற்ற டிபென்டர்கள் அனைவருமே பி.கே.எல்லில் அதிக அனுபவம் இல்லாத வீரர்கள். என்னதான் கவர் டிபென்டர்கள் பலமாய் இருந்தாலும் கார்னர் டிபென்டர்களின் டைமிங்கைப் பொறுத்துதான் மொத்த டிபென்ஸ் திட்டமும் இருக்கும். அந்தவகையில் இந்த இளம் வீரர்கள் இக்கட்டான சமயங்களில் பிரஷரைத் தாங்கி செயல்படுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் அணியின் முன்னேற்றம் இருக்கும்.

துணை ரெய்டர்களாக களமிறங்குப் போகும் சந்திரன் ரஞ்சித்தும் பிரபஞ்சனும் அணியின் பிற வீரர்களை ஒப்பிடுகையில் மிகவும் சீனியர்கள். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக அவர்களின் ஃபார்ம் பிரமாதமாக இல்லை. இருவரும் முறையே 5, 3 என மிகக்குறைந்த சராசரியே வைத்திருக்கிறார்கள். சித்தார்த் தேசாய் ஒருவேளை எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாதபட்சத்தில் இவர்கள் கூடுதல் பொறுப்பையும் சுமந்தாகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கவனிக்கப்படவேண்டிய பிளேயர்

ஜெய்தீப் தஹியா - கவர் பொசிஷனில் சர்வதேச தரத்தில் ஆடக்கூடிய இந்திய வீரர். அறிமுகமான முதல் சீசனிலேயே கவர் டிபென்டர்களில் இவர்தான் பெஸ்ட். கார்னர் டிபென்டர்களுக்கு இணையான சராசரி. போன சீசனிலும் தன் ஃபார்மைத் தக்கவைத்தவர் இந்த சீசனில் முன்னினும் வேகமாய் பாயக் காத்திருக்கிறார். மற்றொரு கவர் டிபென்டரான மோஹித்தும் இவருக்கு சரியான இணை என்பதால் கவரில் பாயின்ட் மழை பொழியும் என நம்பலாம்.

பிளேயிங் செவன்

பி.கே.எல்லில் முதல்முறையாக ஒரு கேப்டனாக இல்லாமல் இரண்டு கோ-கேப்டன்களோடு களமிறங்குகிறது ஹரியானா ஸ்டீலர்ஸ். இது பலமா பலவீனமா என்பது போகபோகத்தான் தெரியும்.

சித்தார்த் தேசாய் (ரைடர்), சந்திரன் ரஞ்சித் (ரைடர்), பிரபஞ்சன் (ரைடர்), ஜெய்தீப் தஹியா (கோ-கேப்டன் - லெப்ட் கவர்), மோஹித் (கோ-கேப்டன் - ரைட் கவர்), நவீன் (லெப்ட் கார்னர்), ராகுல் சேத்பால் (ரைட் கார்னர்)

சித்தார்த், ரஞ்சித், பிரபஞ்சன் ஆகியோர் ஃபார்முக்குத் திரும்பி அணிக்கும் மறுவாழ்வு அளிப்பார்கள் என நம்புகிறது ஹரியானா அணி நிர்வாகம். இந்த முடிவு தொடங்கி அணிக்கு இரண்டு கோ-கேப்டன்களை நியமித்ததுவரை ஏகப்பட்ட ரிஸ்க்குகளை இந்த சீசனில் எடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பலன் தருமா இல்லை அதே பழைய கதைதானா என்பதை போகப் போகப் பார்க்கலாம்.