Vikas kandola
Vikas kandola Bengaluru Bulls
கபடி

Bengaluru Bulls | மீண்டும் கோப்பை வெல்லுமா இந்த புல்ஸ்..!

Nithish

'ஈ சாலா கப் நம்தே' என்பது ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்ளும் புலம்பலாக இருக்கலாம். பெங்களூரு புல்ஸ் ரசிகர்களைப் பொறுத்தவரை 'ஈ சாலாவும் ப்ளே ஆஃப் கன்ஃபார்ம். கப்பு செகண்ட் டைம் நம்தே' என்பதே எண்ணமாக இருக்கும். டீம் அப்படி. பெங்களூரு மூன்று சீசன்களுக்கு முன்பு பி.கே.எல் சாம்பியன். கடந்த நான்கு சீசன்களாக தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவரும் மூன்று அணிகளுள் புல்ஸும் ஒன்று. இந்த முறையும் பேப்பரில் வெயிட்டான டீமையே செட் செய்திருக்கிறார்கள். அதனால் எப்படியும் ப்ளே ஆஃப் சுற்றுவரை நிச்சயம் வந்துவிடுவார்கள் என்பதே பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

ஏலத்திற்கு முன்னதாக கேப்டன் விகாஷையும் கவர் டிபென்டர் மகேந்தர் சிங்கையும் விடுவித்துவிட்டு ஏனைய கோர் டீமை அப்படியே தக்கவைத்துக்கொண்டார்கள். ஏலத்தின்போது விகாஷை மறுபடியும் எஃப்.பி.எம் ஆப்ஷன் வழியே எடுத்துக்கொண்டார்கள். எதிர்பார்த்ததுதான். எதிர்பார்க்காதது மும்பையின் முதன்மை ரைடராக, வைஸ் கேப்டனாக இரண்டு சீசன்களுக்கு முன் வலம்வந்த அபிஷேக் சிங்கை பேக்கப்பாக தூக்கியதுதான். இந்திய அணியின் கவர் டிபென்டரும் தமிழ் தலைவாஸின் முன்னாள் கேப்டனுமான சுர்ஜித் சிங் அடிப்படை விலைக்கே கிடைக்க அவரையும் ஏலத்தில் எடுத்தார்கள். ஆல்ரவுண்டர்களாக ரண் சிங், சச்சின் நர்வால்ம, பேக்கப்களாக பொன்பார்த்திபன் சுப்ரமணியன், மோனு, பன்ட்டி என எல்லா ஏரியாவிலும் ஆக்டிவ்வாக இருந்தார்கள். விளைவு, பெரிதாக குறைகள் சொல்லிவிடமுடியாத ஒரு டீம்.

பலம்

விகாஷ் கண்டோலா, பரத், நீரஜ் நர்வால் மூன்று ரெய்டர்களுமே கடந்த சீசனில் பெங்களூருவுக்காக ஆடியவர்கள். களத்தில் ஒருவருக்கு ஒருவர் சூப்பராக சப்போர்ட் செய்துகொள்வார்கள். போன சீசனில் முதன்மை ரெய்டராக இருந்தும் ஃபார்ம் அவுட் ஆனதால் பரத்துக்கு வழிவிட்டு செகண்ட்ரி ரைடர் ஆனார் விகாஷ். பரத்தும் அந்த பொறுப்பை உணர்ந்து செம்மையாக விளையாடினார். இந்த கெமிஸ்ட்ரி அணிக்கு பெரும்பலம்.

கார்னர் டிபென்டர்கள் அமனும் சவுரப் நந்தலும் காலங்காலமாக பெங்களூரு அணிக்காகவே உழைத்துக் கொட்டுபவர்கள். இருவரின் கேம்பிளானும் இருவருக்குமே அத்துப்படி. இந்த இணை அதே ஃபார்மை தொடரும்பட்சத்தில் இந்த சீசனும் சட்சட்டென எதிராளிகளை லாக் செய்வார்கள்.

ரந்தீர் சிங்

பி.கே.எல்லில் ஒவ்வொரு சீசனுக்கும் டீம் மாறும், கோச்கள் மாறுவார்கள். ஓனர்களைத் தவிர எதுவுமே நிரந்தரமில்லை அணியில். ஆனால் பெங்களூரு மட்டும் தங்கள் கோச் ரந்தீர் சிங் ஷெராவத்தை பல ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அந்த நம்பிக்கைக்கு ஏற்றார்போல அணியை தொடர்ந்து ப்ளே ஆப்பிற்குள் வழிநடத்துகிறார். அவரின் தலைமையும் அணிக்கு பெரும்பலம்.

பலவீனம்

டீம் பக்காவாக செட் ஆகியிருந்தாலும் பிளேயர்களின் ஃபார்மே பெங்களூருவை பயமுறுத்தும் பலவீனமாக இருக்கும். போன சீசனுக்கு முன்புவரை கோல்டன் டச்சில் இருந்த விகாஷ் கடந்த சீசனில் ரொம்பவே தடுமாறினார். இந்தமுறை அவர் ஃபார்முக்கு திரும்பாவிட்டால் பரத் மேல் எக்கச்சக்க பிரஷர் உண்டாகும். கவர் டிபென்டரான சுர்ஜித் கடந்த முறை தெலுங்கு டைட்டன்ஸ் முகாமில் ஏகப்பட்ட மன உளைச்சல்களுக்கு உள்ளானார். ஃபார்மும் அவுட். அதன்பின் ஏசியன் கேம்ஸ்வரை சென்று விளையாடி வந்துவிட்டார் என்றாலும் பி.கே.எல்லில் தன் பழைய ஃபார்மை மீட்டெடுக்கவேண்டியது அவசியம். மற்றொரு கவர் டிபென்டரான விஷாலின் ஃபார்மும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

கவனிக்கப்படவேண்டிய பிளேயர்

போனஸ் லைனில் ஒரு கால் வைத்து அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கை நீட்டினால் மையக்கோட்டைத் தொட்டுவிடலாம். அப்படி ஒரு உயரம், கூடவே மின்னல் வேகம் இது இரண்டும் பரத்தின் ஸ்பெஷாலிட்டி. கடந்த சில சீசன்களாக பெங்களூரு அணியின் முக்கிய பிளேயராக இருந்தாலும் பவனுக்கு துணை ரெய்டராகவே வலம்வந்தார். போன சீசனில் விகாஷின் காயம் இவர் மேல் வெளிச்சம் விழ வைக்க, 279 பாயின்ட்கள். அதனால் இந்தமுறை விஷாலைத் தாண்டி இவர்மேல் எதிர்பார்ப்பு எகிறுகிறது. இவருக்கென எதிரணிகள் வகுத்துவைத்திருக்கும் திட்டங்களைக் களத்தில் காண சுவாரஸ்யமாக இருக்கும்.

ப்ளேயிங் செவன்

அபிஷேக் பேக்கப்பாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். எனவே இதுதான் லீக்கின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூருவின் ப்ளேயிங் செவனாக இருக்கும்.

விகாஷ் கண்டோலா (கேப்டன் - ரைடர்), பரத் (ரைடர்), நீரஜ் நர்வால் (ரைடர்), விஷால் (லெப்ட் கவர்), சுர்ஜித் சிங் (ரைட் கவர்), அமன் (லெப்ட் கார்னர்), சவுரப் நந்தல் (ரைட் கார்னர்)

கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் என லீக்கிற்கு முன்பாக கணிக்கப்படும் அணிகளுள் பெங்களூருவும் ஒன்று. கபடி கணிக்கமுடியாத விளையாட்டுதான் என்றாலும் குறைந்தது ப்ளே ஆஃப் வரைக்கும் முன்னேறும் திறமை இந்த அணிக்கு உண்டு. முன் செல்வார்களா பின்தங்கிப் போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.