Shrikant jadhav
Shrikant jadhav Bengal Warriors
கபடி

Bengal Warriors | பலவீனமான அணி தான்... ஆனால்..?

Nithish

பி.கே.எல்லைப் பொறுத்தவரை பெங்கால் வாரியர்ஸ் கணிக்கவே முடியாத அணி. எப்போது நன்றாக ஆடுவார்கள், எப்போது சொதப்பித் தள்ளுவார்களென அவர்களுக்கும் தெரியாது, எதிராளிகளுக்கும் தெரியாது. முதல் சில சீசன்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் உள்ளே வெளியே விளையாடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென எதிர்பாராத வகையில் ஏழாவது சீசன் சாம்பியன் ஆனார்கள். 'ஓ நிலைமை மாறிடுச்சு போல' என எல்லாரும் எதிர்பார்த்த வேளையில், 'ச்சேச்சே அதெப்படி மாறும், டிசைன்ல இருக்கு' என அடுத்த சீசனில் ஒன்பதாவது இடம் பிடித்தார்கள். போன சீசனில் அதற்கும் மோசம். 11வது, அதாவது கடைசிக்கு முந்தைய இடம்.

இந்தமுறை புது இளம் வீரர்களைத் தவிர மீதி அனைவரையும் ஏலத்திற்கு முன் விடுவித்துவிட்டார்கள் கோப்பை வென்ற கேப்டன் மணிந்தர் உள்பட. சரி, புதிய டீமை செட் செய்யப்போகிறார்கள் போல என நினைத்தால் முதலில் எஃப்.பி.எம் ஆப்ஷனை பயன்படுத்தி மணிந்தரை அதிக விலை கொடுத்து மீண்டும் எடுத்தார்கள். சரி, ஒருவேளை பல சீசன்களாக அதே தொகையில் ரீட்டெயின் செய்யப்படுவதால் மணிந்தரே கூட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து இப்படி வெளியே போய் உள்ளே வந்திருக்கலாம். 20 லட்சத்திற்கு போன சீசனில் எடுத்த ஷுபம் ஷிண்டேவை விடுவித்துவிட்டு மீண்டும் 32.25 லட்சத்திற்கு எடுத்தார்கள். அதைக்கூட ஷிண்டேவின் கேட்டகிரி அப்க்ரேட் என எடுத்துக்கொள்ளலாம். துணை ரெய்டரான ஶ்ரீகாந்த் ஜாதவ்வை இவர்கள் ரீட்டெயின் செய்திருந்தாலே 26 லட்சத்தில் முடிந்திருக்கும். அவரை 35 லட்சம் கொடுத்து மீண்டும் எடுத்தார்கள். இத்தனைக்கும் ஶ்ரீகாந்த் அதே கேட்டகிரி பியில் தான் இரண்டு ஏலத்திலும் இருந்தார். மொத்தத்தில் மோசமான நிர்வாகத்திறன் இது. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பின் கோப்பை வெல்லும் என்கிற நம்பிக்கையில் ஒரு டீமை செட் செய்திருக்கிறார்கள்.

பலம்

கேப்டன் மணிந்தர் சிங்தான். கடந்த ஐந்து சீசன்களாய் ஒரே அணியோடு பயணிக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 200 பாயின்ட்கள். தடுக்கவரும் டிபென்டர்களை முட்டித் தள்ளி முன்னேறுவது மணி ஸ்பெஷல். இந்த சீசனிலும் அவரின் ஆற்றலை முழுவீச்சில் பயன்படுத்திவார் என நம்பலாம்.

ஆல்ரவுண்டர் நிதின் ராவலின் வருகையும் அணிக்கு பலம். கார்னர் டிபெண்டராய் முன்பு ஆடியிருந்தாலும் இந்தமுறை கவர் டிபென்டராய் ஆடவே வாய்ப்புகள் அதிகம். இக்கட்டான நேரத்தில் ரெய்டுகள் சென்றும் பாயின்ட்கள் எடுத்துவரக்கூடியவர்.

பலவீனம்

அணியின் அனுபவம் குறைந்த டிபென்ஸ். ரைட் கார்னரில் ஆடும் ஷுபம் ஷிண்டே சுமாரான தொடக்க சீசன்களுக்குப் பின் கடந்தமுறைதான் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். இந்தமுறை டிபென்ஸில் சீனியர் அவரே என்பதால் இன்னும் நன்றாக விளையாடினால் மட்டுமே பெங்கால் அணிக்கு டிபென்ஸில் பாயின்ட்கள் வர வாய்ப்பிருக்கிறது. லெப்ட் கார்னர் அக்‌ஷய் குமாருக்கும் ரைட் கவர் வைபவ் கார்கேவுக்கும் பி.கே.எல் அனுபவம் மிகக் குறைவு. இவர்கள் ஒண்றிணைந்து அணியாக செயல்பட வேண்டியது அவசியம்.

அணியின் மூன்றாவது ரெய்டர் யார் என்பதிலும் சிக்கல்கள் இருக்கும். முதல் சாய்ஸான விஸ்வாஸ் போன சீசனில் நான்கே போட்டிகளில்தான் ஆடினார். பேக்கப்களாக குகன், சுயோக் கெய்கர், இலங்கையின் அஸ்லம் தம்பி ஆகியோர் இருக்கிறார்கள்தான். ஆனால் இவர்களின் பி.கே.எல் அனுபவமும் மிக மிகக் குறைவு. ப்ளேயிங் செவனில் இத்தகையை அனுபவக் குறைவு நிறைய சிக்கல்களை உண்டுபண்ணலாம்.

கவனிக்கப்பட வேண்டிய பிளேயர்

ஶ்ரீகாந்த் ஜாதவ். 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' ரகம். இதுவரை ஆடிய அத்தனை டீம்களிலும் துணை ரெய்டர்தான். ஆனால் என் பணி தேவைப்படும் நேரத்தில் பாயின்ட் எடுத்துக்கொடுப்பதே என அதை மட்டுமே இலக்காய் வைத்து ஆடும் பிளேயர். இந்தமுறை இவருக்கு அதிக வெளி கிடைக்கும்பட்சத்தில் முந்தைய சீசன்களைவிட சிறப்பாக ஆடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

ப்ளேயிங் செவன்

Maninder singh

முன் சொன்னதுபோல மூன்றாவது ரெய்டர் யார் என்பதில் மட்டும் மாற்றங்கள் இருக்கலாம்.

மணிந்தர் சிங் (கேப்டன் - ரைடர்), ஶ்ரீகாந்த் ஜாதவ் (ரைடர்), விஸ்வாஸ் (ரைடர்), நிதின் ராவல் (லெப்ட் கவர்), வைபவ் கார்கே (ரைட் கவர்), அக்‌ஷய் குமார் (லெப்ட் கார்னர்), ஷுபம் ஷிண்டே (ரைட் கார்னர்)

பேப்பரில் பலவீனமான அணியாகத்தான் காட்சியளிக்கிறது பெங்கால் வாரியர்ஸ். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வீறுகொண்டெழுவதுதான் அந்த அணியின் இயல்பே. அதனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.