ireland team  reuters
விளையாட்டு

கால்பந்து மைதானத்தில் காசா ஆதரவு.. இஸ்ரேல் வீரர்களை புறக்கணித்த அயர்லாந்து! என்ன நடந்தது?

காசாவுக்கு ஆதரவாக கருப்புப் பட்டையுடன் மைதானத்தில் களமிறங்கிய அயர்லாந்து, இஸ்ரேல் வீரர்களுடன் கை குலுக்கலை புறக்கணித்து தங்களது அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

PT WEB

இஸ்ரேல் அணியுடன் நடந்த நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி, காசா போருக்கு எதிரான அயர்லாந்து வீரர்களின் அமைதியான போராட்டத்தால் உலக கவனத்தை ஈர்த்தது. கருப்புப் பட்டை அணிந்து மைதானத்துக்கு வந்த அவர்கள், கை குலுக்கலை புறக்கணித்து, தேசிய கீதம் நேரத்திலும் இஸ்ரேல் அணியை நோக்கிப் பார்க்காமல் இருந்தனர்.

இஸ்ரேல் அணியுடனான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், அயர்லாந்து அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தில், அயர்லாந்து அணி வீரர்கள் காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாகவும் அமைதியான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

ireland - Israel match

போட்டி தொடங்குவதற்கு முன், அயர்லாந்து வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து மைதானத்திற்குள் வந்தனர். இது காசாவில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாகக் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வழக்கமாக போட்டிக்கு முன் நடைபெறும் வீரர்களின் கை குலுக்கும் நிகழ்விலும் அவர்கள் பங்கேற்க மறுத்தனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், அயர்லாந்து வீரர்கள் இஸ்ரேல் அணியை நோக்கிப் பார்க்காமல் அமைதியாகவே இருந்தனர். இந்தச் சம்பவம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

காசா போர் தொடர்பாக அயர்லாந்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், அயர்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3–0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை வீழ்த்தியது. மைதானத்தில் வெற்றியையும், போட்டிக்கு முன் தங்களது அரசியல் எதிர்ப்பையும் ஒரே நாளில் பதிவு செய்துள்ளனர் அயர்லாந்து வீரர்கள் .