- பிரேம்குமார் சீ
அடுத்த ஐபிஎல் நடைபெற இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே அணியினரின் வெளியேற்றம், பறிமாற்றங்கள் குறித்து பல செய்திகள் உலாவ ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்குமாறு கேட்டுகொண்டதாக செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபத்தில் தனது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தார். இந்திய அணிக்காக அனைத்து வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2025 ஐபிஎல் சீசனில் ரூ 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஸ்வினின் மறுபிரவேசம் அந்த அளவிற்கு எடுபடவில்லை. 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். மேலும் இந்த சீசனில் அஸ்வினின் பந்து வீச்சும் மோசமாகவே இருந்தது.
இதற்கிடையே, சென்னை அணி நிர்வாகத்திடம் தன்னை அணியில் இருந்து நீக்க வேண்டும் என அஸ்வின் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தான் சஞ்சு சாம்சன் தன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் பரவியிருந்தது. சென்னை அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இருப்பதால் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கும், ஏற்கனவே அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கு விளையாடி நல்ல வெற்றி சதவீதம் வைத்திருப்பதால் அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கும் மாற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இருப்பினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக செய்திகள் வரும் வரை இவை அனைத்தும் வதந்தியே.