நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் (Christchurch) பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள், மகளிர் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை.
இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வீராங்கனைகள் ஷெஃபாலி வர்மா 53 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 71 ரன்கள், மிதாலி ராஜ் 68 ரன்கள், ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தனர்.
30 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. எப்படியும் 300 ரன்களை இந்தியா நெருங்கும் என்ற நிலை. இருந்தும் கடைசி 20 ஓவர்களில் வெறும் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்க அணி கடைசி 20 ஓவர்களில் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.