sumit nagal
sumit nagal twitter
விளையாட்டு

ரூ.80,000 டு ஆஸி. ஓபன்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்த இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்!

Prakash J

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பங்கேற்றார். இதில் தரவரிசையில் 31வது இடத்திலுள்ள அலெக்ஸாண்டர் பப்லிக்கை முதல்சுற்றில் எதிர்கொண்டார். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், சுமித் நாகல் 6-4, 6-2, 7-6 [7-5] என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தரவரிசையின்படி முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்ற வீரர் ஒருவரை தோற்கடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சுமித். இந்தியாவில் நம்பர் 1 வீரராக இருக்கும் சுமித், உலக அளவில் 137வது இடத்தில் உள்ளார்.

முன்னதாக 1989இல் ஆஸ்திரேலிய ஒபனில் இரண்டாம் சுற்றில் அப்போதைய உலகின் நம்பர் 1 வீரர் மேட்ஸ் விலாண்டரை, ரமேஷ் கிருஷ்ணன் என்ற இந்திய வீரர் வீழ்த்தி இருந்தார். அதன்பின் 35 ஆண்டுகள் கழித்து தற்போது சுமித் நாகல் அந்தச் சாதனையை மீண்டும் செய்து இருக்கிறார். நாகலின் இரண்டாவது சுற்று தகுதி இந்தியர்களுக்கு டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத சாதனையாகும். ஆடவர் ஒற்றையர் பிரிவுகளுக்கு வரும்போது, ​​ஆஸ்திரேலிய ஓபனில் எந்த இந்திய டென்னிஸ் வீரரும் எட்டாத தூரம் மூன்றாவது சுற்றாகும்.

இதையும் படிக்க: ட்ரம்பின் வைத்த காட்டமான விமர்சனம்; போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த விவேக் ராமசாமி! பின்னணிஎன்ன?

இந்த நிலையில், சுமித் நாகல் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், “என்னுடைய வங்கிக் கணக்கில் வெறும் 80,000 ரூபாய் மட்டுமே உள்ளது. தற்போது மகா டென்னிஸ் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் சுதார்தான் எனக்கு உதவுகிறார். ஐஓசிஎல் நிறுவனத்திடமிருந்து மாத சம்பளத்தைப் பெறுகிறேன். எனக்கென்று பெரிய அளவில் ஸ்பான்சர்கள் யாரும் இதுவரை கிடைக்கவில்லை. நான் சம்பாதிப்பதை எல்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே முதலீடு செய்கிறேன். நான் ஒரு பயிற்சியாளருடன் பயணிப்பதற்கு வருடத்திற்கு சுமார் 80 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை செலவாகிறது.

டென்னிஸை பொறுத்தவரை இந்தியாவில் நம்பர் 1 வீரராக இருக்கிறேன். ஆனாலும் எனக்குத் தேவையான எந்த உதவிகளும் சரியாகக் கிடைப்பதில்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்குத் தகுதி பெறும் ஒரே வீரர் நான்தான், அதுமட்டுமின்றி டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக ஆட்டத்தை வென்ற ஒரே வீரர் நான்தான். இருப்பினும் மத்திய அரசு எனது பெயரை டார்கெட் ஒலிம்பிக் பதக்க மேடை (TOPS) திட்டத்தில் சேர்க்கவில்லை. நான் காயப்பட்டிருந்தபோதும் யாரும் உதவ முன்வரவில்லை. இந்தியாவில் விளையாட்டுக்கு என்று நிதியுதவி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது” என தனது வேதனையைத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஆளுநர் டு அண்ணாமலை: காவிநிற சர்ச்சையில் வள்ளுவர் படம்.. வெள்ளைநிற உடையில் ஓவியம் வந்தது எப்படி?

இவரது பேட்டியைக் கண்டபிறகு, பிரபல முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சிகோ இந்தியா மற்றும் டெல்லி லான் டென்னிஸ் சங்கம் (டிஎல்டிஏ) ஆகியவற்றின் உதவியைப் பெற்றார். இந்த உதவியே அவரது ஆஸ்திரேலிய பயணத்தின் உயர்வுக்குக் காரணமாய் அமைந்துள்ளது.

இந்தத் தொடரில் 2வது சுற்றுக்கு நாகல் முன்னெறியிருப்பதன் மூலம் அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். . தற்போது உலகத் தரவரிசையில் 137வது இடத்தில் இருக்கும் நாகல், முன்னதாக கடந்த 2021இல் ஆஸ்திரேலிய ஒபனில் பங்கேற்றபோது முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகல் அடுத்து 2வது சுற்றில் சீனாவின் வைல்டு கார்டு ஜுன்செங் ஷாங்கை எதிர்கொள்ள இருக்கிறார்.