ட்ரம்ப், விவேக் ராமசாமி
ட்ரம்ப், விவேக் ராமசாமிட்விட்டர்

ட்ரம்ப் வைத்த காட்டமான விமர்சனம்; போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த விவேக் ராமசாமி! பின்னணிஎன்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இருந்து இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி விலகியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் 

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணம்தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருகட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

விவேக் ராமசாமியை ’மோசடி பேர்வழி’ எனக் குறிப்பிட்ட டொனால்டு!

அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். இவர்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளநிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் ஆதரவு அதிகமாக இருந்தது.

பிரசாரத்தின்போது, விவேக் ராமசாமியை ’மோசடி பேர்வழி’ எனக் குறிப்பிட்ட டொனால்டு ட்ரம்ப், ’இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு நீங்கள் வாக்களித்தால், அது அமெரிக்காவுக்கு வாக்களிப்பது இல்லை’ என்பது போல எனத் தெரிவித்திருந்தார். ட்ரம்பின் இந்தப் பேச்சு குடியரசு கட்சியில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விவேக் ராமசாமி தற்போது அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

4வது இடத்துக்குத் தள்ளப்பட்ட விவேக் ராமசாமி!

சமீபத்தில் அயோவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் டிரம்புக்கு 51.1% வாக்குகள் கிடைத்தன. புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7% வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். நிக்கி ஹாலேவுக்கு 19% வாக்குகளும், விவேக் ராமசாமிக்கு 7.7 % வாக்குகளும் கிடைத்தன. இந்தப் பின்னடைவினைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

”75% அரசுப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்” - எச்சரித்த விவேக்

முன்னதாக, “நான், அமெரிக்க அதிபரானால் 75% அரசுப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். அத்துடன் எஃப்.பி.ஐ, உள்ளிட்ட அமைப்புகளும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கலைக்கப்படும். நான் வெற்றிபெற்று அதிபரானால், புதியதாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர்களை என் அரசாங்கத்தில் நிர்வாக ஆலோசனைகளுக்காக நியமித்துக்கொள்வேன்.

இதில் எலான் மஸ்க்கையும் சேர்த்தக்கொள்ள விரும்புகிறேன். அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறாரோ, அதேபோல், நான் அமெரிக்க நிர்வாகத்தை மறுசீரமைத்து அமெரிக்காவை முன்னோககிக்கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கள் இருவரின் சிந்தனையும் பல விஷயங்களில் சார்ந்துபோகிறது“ என விவேக் ராமசாமி பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த விவேக் ராமசாமி?

இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள், பணி நிமித்தமாக அமெரிக்கா ஓஹியோ (Ohio) மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தனர். இதனால், விவேக் ராமசாமி பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்திலுள்ள சின்சினாட்டி (Cincinnati) பகுதியில்தான். பள்ளிப்படிப்பை அப்பகுதியிலேயே முடித்த விவேக், இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

படிப்புக்குப் பிறகு, கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கிடையே சட்டப்படிப்பையும் முடித்து வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தொழிலில் கொடிகட்டி பறக்கத் தொடங்கினார். தற்போது அமெரிக்க மருத்துவத் துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம்வரும் விவேக் ராமசாமி, Woke, Nation of victims உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தனது கல்லூரிக் காலங்களில் படிப்பில் மட்டுமல்லாமல் மியூசிக், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராக வலம் வந்தவர் விவேக் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப், விவேக் ராமசாமி
”நான் அமெரிக்க அதிபரானால்..”- எலான் மஸ்க் வழியில் அதிரடி காட்டும் இந்திய வம்சாவளி ’விவேக் ராமசாமி’!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com