இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி, 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் புகுந்தனர்.
கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே கலக்கினார். ஆர்ச்சரின் ஓவரில் 2 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்து அதகளப்படுத்தினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே நடையைக் கட்டினார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அதற்குப் பின் திலக் வர்மா, அபிஷேக்குடன் இணைந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தனர். அதிலும், அபிஷேக் சர்மா பட்டையைக் கிளப்பினார். இங்கிலாந்து எல்லாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் அனுப்பியபடியே இருந்ததுடன், ரசிகர்களுக்கும் விருந்து படைத்துக் கொண்டே இருந்தார். இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் பவர் பிளேயில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இதனால், 17 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். இதையடுத்து டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரரானார். இதற்கு முன்பு, யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் பொறுமையாக விளையாடிய திலக் வர்மா 15 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதற்குப் பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் 2 ரன்களில் வெளியேறினார்.
அதேநேரத்தில், யார் வந்து போனாலும் எனக்குக் கவலையில்லை என்கிற தொணியில் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா, விரைவாகவே சதத்தையும் கடந்தார். அவர், 37 பந்துகளில் 5 பவுண்டரி, 10 சிக்ஸருடன் 100 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா தலா 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன்பு சுப்மன் கில் 126* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்ஸர்களுடன் உள்ளனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.