மகளிர் ஹாக்கி அணி X
விளையாட்டு

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை.. 52 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்திய அணி!!

1974-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மகளிர் ஹாக்கி உலகக்கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி படைத்திருக்கும் அந்த சாதனை என்ன? பார்க்கலாம்.

Premkumar S

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர், 1974-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 உலகக்கோப்பைத் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், 16-வது உலகக்கோப்பைத் தொடர் இந்த ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர், ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தாலும், 5-வது இடத்துக்கான போட்டியில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது.

மகளிர் ஹாக்கி அணி

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. ஆனால், இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

குறிப்பாக, இந்திய அணிக்காக இஷிகா சௌத்ரி (Ishika Chaudhary) ஒரு கோல் அடித்த நிலையில், நவ்நீத் கவுர் (Navneet Kaur) இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

1974-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாக தற்போது 5-வது இடம் அமைந்துள்ளது.

அதாவது, 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை அரங்கில் இந்திய மகளிர் டாப் 5- இடத்தைப் பிடித்து புதிய சாதனையை பதிவு செய்திருக்கிறது.