பிசிசிஐ x page
விளையாட்டு

பிசிசிஐ புதிய விதிகள் | திடீரென அமல்படுத்த காரணம் என்ன? வெளியான புது தகவல்! கவலையில் வீரர்கள்!

பிசிசிஐயின் இந்தப் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக, தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்தப் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக, தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள்

அதாவது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய வீரர் ஒருவர், 27 பைகள் கொண்ட 250 கிலோவுக்கும் அதிகமான பொருட்களை எடுத்துச் சென்றதுடன், அதற்கு பிசிசிஐயே பணம் கட்டியுள்ளது. அதில் 16 மட்டைகளுடன், குடும்ப உறவினர்களின் பொருட்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தவிர, சுற்றுப்பயணத்தின் முழு நேரமும், அந்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள் அவருடன் இருந்தனர்.

மேலும், ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்றபோதும் அந்தப் பொருட்களுக்கு பிசிசிஐயே பணம் கட்டியுள்ளது. இந்த தொகை குறித்த முழு விவரம் வெளிவராதபோதும், லட்சக்கணக்கில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, பிசிசிஐ புதிய விதிகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாரியம் இந்த விதியை அமல்படுத்த வேண்டியிருந்தது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. புதிய விதியின்படி, 150 கிலோ வரையிலான பொருட்களுக்கான செலவை மட்டுமே பிசிசிஐ ஏற்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. வீரர்கள் இப்போது போட்டிகளுக்கு அணியினருடனே இணைந்து பேருந்தில் பயணிக்க வேண்டும். அணி பயணத்திற்கு வரும்போது எந்த வீரருக்கும் தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி

இந்த விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகே, இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதுவே, தற்போது சாம்பியன்ஸ் டிராபி பயணத்தின்போதும் கடைப்பிடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கப்படும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.