BCCI புதிய விதிகள்: “வீரர்களின் மனைவிகளுக்கு கிரிக்கெட் தெரியாது” - முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களின் ஒழுக்கத்தையும், அணியின் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்புக்குப் பிறகு அஜித் அகர்கரிடம் பேசிய ரோகித், “இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று விதிமுறை குறித்து பிசிசிஐ செயலாளருடன் நான் பேச வேண்டும். அனைத்து வீரர்களும் என்னிடம் இதைப் பற்றித்தான் கேட்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அகார்கர் ரோகித்தைச் சமாதானப்படுத்தினார்.
“9 கட்டுப்பாடுகள் அமலில் இருந்தவை”
அதேநேரத்தில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததற்கு வீரர்கள் மனைவியுடன் சென்றதோ, அவர்கள் தனியாகப் பயணித்ததோ காரணம் இல்லை. தோல்விக்கு மோசமான விளையாட்டே காரணம். தற்போது வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளில் 9 கட்டுப்பாடுகள் நாங்கள் விளையாடிய காலத்திலேயே அமலில் இருந்தவை.
இடையில் அதனை மாற்றியது யார், எப்போது மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்தியாவின் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே தற்போது இந்த கட்டுப்பாடுகள் வெளியாகியுள்ளன. இந்திய அணி மோசமாக விளையாடியதே தோல்விகளுக்கு காரணம். முன்னதாக, சில விஷயங்களுக்கு பிசிசிஐயின் ஒப்புதல் பெற வேண்டும். அது சம்பந்தமாக வீரர்கள் பிசிசிஐக்கு மெயில் அனுப்பலாம். இதில், தலைமைப் பயிற்சியாளர் ஏன் தலையிட வேண்டும்? அது அவருடைய வேலை கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.
“வீரர்களின் மனைவிகளுக்கு கிரிக்கெட் பற்றித் தெரியாது”
இதுகுறித்து யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், ”ஒரு வீரர் அணியுடன் பயணம் செய்யும்போது எதற்காக குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டும்? அது உங்கள் கவனத்தைக் குலைக்கும். நீங்கள் ஓய்வுபெற்ற பின் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நீங்கள் நாட்டுக்காக ஆடும்போது சமையல்காரர்கள் மற்றும் குடும்பத்தினரை உங்களுடன் அழைத்துச் சென்றால் அது உங்களுக்கு சுமையாகவே இருக்கும். மனைவிகளுக்கு கிரிக்கெட்டை பற்றித் தெரியாது. எதற்காக உங்கள் குழந்தைகளும், மனைவி அங்கே இருக்க வேண்டும்? நீங்கள் விளையாடும்போது அணிதான் உங்களின் குடும்பம். எனவே, குடும்பத்தினர் அங்கே தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
10 அம்சக் கட்டுப்பாடுகள் என்னென்ன?
1. உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்.
2. அணியுடன் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
3. குடும்பப் பயணத்திற்கு கட்டுப்பாடு
4. கூடுதல் உடைமைகளுக்குத் தடை
5. தனிப்பட்ட ஊழியர்களுக்குத் தடை
6. உபகரண தளவாடங்கள் எடுத்துச் செல்ல அணியின் அனுமதி
7. பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றில் வீரர்கள் இருக்க வேண்டும்.
8. சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.
9. பயிற்சி நேரத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.
10. சுற்றுப்பயணத்தின்போது தனிப்பட்ட புகைப்படம் எடுக்கக் கூடாது.
விதிவிலக்குகள் என்ன?
தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளரின் ஒப்புதலுடன் வீரர்கள் இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு கோரலாம்
தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர்களின் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்குப் பொருத்தமானதாகக் கருதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
தண்டனைகள் என்ன?
விதிமுறைகளை மீறும் வீரர்களின் ஒப்பந்த ஊதியம் அல்லது போட்டிக் கட்டணத்தில் குறைப்பு செய்யப்படலாம்.
இந்தியன் பிரீமியர் லீக் உட்பட பிசிசிஐ நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.