செய்தியாளர் - ராஜ்குமார்.ர
சர்வதேச அரங்கில் நீண்ட காலமாக இந்திய விளையாட்டு அணிகளின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த நீல நிறத்துக்குப் பதிலாக, இந்திய ஹாக்கி அணியின் புதிய ஜெர்சியில் காவி நிறம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் பெரும்பாலும் நீல நிற ஜெர்சியுடனேயே களமிறங்கி வருகின்றன. இந்திய ஹாக்கி அணியும் இதுவரை நீல நிற உடையையே தனது அடையாளமாகக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச FIH ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஹாக்கி அணிகளுக்கான புதிய ஜெர்சிகளை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், நீல நிறத்துக்குப் பதிலாக காவி நிறம் இடம்பெற்றுள்ளது.புதிய ஜெர்சி அறிமுகமானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய விளையாட்டு அணிகளின் பாரம்பரிய அடையாளமான நீல நிறத்தை மாற்றுவது தேவையற்ற நடவடிக்கை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலம் வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத அவர்கள் முயற்சிக்கலாம். ஆனால் நமது இளைய சமுதாயம் என்ன நினைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஜந்தர் மந்தர் சம்பவமே அதற்கு சான்று. இன்று ஹாக்கியில் இதைச் செய்திருக்கிறார்கள்; நாளை ராணுவத்திலும் இதையே செய்யக்கூடும். அவர்களை எப்படி நம்புவது? அவர்களுக்கு எல்லா இடங்களிலும் காவி வேண்டும்" என்று விமர்சித்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் தீர்கே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச ஹாக்கி போட்டிகள் பெரும்பாலும் நீல நிற செயற்கைப் புல்வெளியில் நடைபெறுவதால், அதே நிற ஜெர்சி அணிந்த வீரர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு மாற்றாக மஞ்சள் மற்றும் காவி நிறங்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், இந்திய தேசியக் கொடியின் ஒரு நிறமாகவும், தியாகம் மற்றும் தைரியத்தின் அடையாளமாகவும் காவி நிறம் கருதப்படுவதால் அதையே தேர்வு செய்ததாகவும் விளக்கமளித்தார். ஏற்கனவே ரயில்வே கட்டிடங்கள், ரயில்கள் மற்றும் பிகாரில் அரசு பள்ளிகளுக்கு காவி நிறம் பூசும் திட்டங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்திய ஹாக்கி அணியின் புதிய ஜெர்சியிலும் காவி நிறம் இடம்பெற்றிருப்பது மேலும் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.