2029 தேர்தல் களத்தில் Gen Z வாக்காளர்களின் எழுச்சி.. தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவின் அரசியல் போக்கையும், தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் மிக முக்கிய வாக்காளர் சக்தியாக ஜென் ஸி தலைமுறை உருவெடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா விவகாரத்தில் அது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவில் 2029ஆம் ஆண்டில், 18 முதல் 32 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 38 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35.7 கோடி வாக்களர்களை கொண்ட ஜென் 'மில்லெனியல்ஸ்' தலைமுறையை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய வயது வந்தோர் தலைமுறையாக ஜென் ஸி உருவெடுக்கும்.
இதேபோல் ஜென் எக்ஸ் தலைமுறையில் 23.4 கோடி பேரும், ஜென் பூமர்ஸ் 11.7 கோடி பேரும், இதர வயதினர் 90 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதியுடையவராக இருப்பர். 1988இல் இந்தியாவின் வாக்களிக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 38.3 சதவீதமாக இருந்தனர். பின்னர் 2021இல் 31.5 சதவீதமாகவும், 2024ஆம் ஆண்டில் 30.1 சதவீதமாகக் குறைந்தது. தொடர்ந்து 2027ஆம் ஆண்டில் 28.7% சதவீதமாக குறையும் என்றும் 2029ஆம் ஆண்டில் அது 27.8 சதவீதமாக மேலும் குறையும் என்று ஐ.நாவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் வரும் பத்தாண்டின் முடிவில், வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவராக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணிக்கை அளவில் குறைவாக இருப்பினும் அரசியல் மாற்றங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதையே சமீபத்திய மாணவர் போராட்டங்கள் நிரூபித்துள்ளன.

