இந்தியாவிற்காக 2025 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கே மறுமலர்ச்சி கொடுத்த இந்த கோப்பை வெற்றிக்குபிறகு, டி20 உலகக்கோப்பையையும் வென்றுகொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் பல ஆண்டு கோப்பைக் கனவை நிறைவேற்றிக்கொடுத்த வெற்றிக் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நிர்வாகம். ஹர்மன் நீக்கப்பட்டு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிரந்தர கேப்டனாக மாற்றப்பட்டார்.
இந்தச்சூழலில் தான், ஹர்மன்ப்ரீத்திடம் ஸ்மிருதி மந்தனா பேசுவதில்லை என்றும், கேப்டன்சி மாற்றத்தில் இருவருக்கும் மனக்கசப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மேலும் விரிவடைந்து தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி, ஹர்மனிடம் கோவப்பட்டதாகவும் சில தகவல்கள் பரவியது .
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஆனால், இந்த வெற்றிக்கு மத்தியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும், புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போட்டியின் முடிவில் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொண்ட போது, ஸ்மிருதி மந்தனா மற்ற வீரர்களுக்கு 'ஹை-ஃபைவ்' கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஹர்மன்பிரீத் கவுர் அவரை நோக்கி வந்தபோது, மந்தனா வேறு பக்கமாகத் திரும்பியதால் இருவரும் வழக்கமான கைக்குலுக்கலைத் தவறவிட்டதாக ஒரு குறுகிய வீடியோ வைரலானது.
ஏற்கெனவே ஹர்மன்ப்ரீத் கவுரிடம் இருந்த கேப்டன் பொறுப்பு ஸ்மிருதி மந்தனாவிடம் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.