அவமதித்த ஸ்மிருதி மந்தனா..? சதமடித்து நிரூபித்த ஹர்மன்ப்ரீத்! இந்திய அணியில் குழப்பம்?
கேப்டன்ஸி மாற்றம் மற்றும் மனக்கசப்பை மையமாக கொண்ட சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிரடி சதமடித்த ஹர்மன்ப்ரீத், தன்னுடைய திறமையை நிரூபித்தார். மந்தனா கைத்தட்டும் வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், வதந்திகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிதாலி ராஜ் போன்ற தலைசிறந்த வீராங்கனைகளாலேயே கோப்பை வெல்லமுடியாத சூழலில், இந்தியாவிற்காக 2025 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கே மறுமலர்ச்சி கொடுத்த இந்த கோப்பை வெற்றிக்குபிறகு, டி20 உலகக்கோப்பையையும் வென்றுகொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. அந்த இலக்குடன் தான் ஹர்மன்ப்ரீத்தும் இருந்தார் என சொல்லப்படுகிறது.
ஆனால் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மாவிற்கு என்ன நடந்ததோ அதேதான் ஹர்மன்ப்ரீத்துக்கும் நடந்தது. பல ஆண்டு கோப்பைக் கனவை நிறைவேற்றிக்கொடுத்த வெற்றிக்கேப்டன் ஹர்மன்ப்ரீத்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நிர்வாகம். ஹர்மன் நீக்கப்பட்டு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிரந்தர கேப்டனாக மாற்றப்பட்டார். ஆனால் இந்தமுடிவில் ஹர்மன்ப்ரீத்துக்கு விருப்பம் இல்லையென்றே சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் தான் ஹர்மன்ப்ரீத்திடம் ஸ்மிருதி மந்தனா பேசுவதில்லை என்றும், கேப்டன்சி மாற்றத்தில் இருவருக்கும் மனக்கசப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மேலும் விரிவடைந்து தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி, ஹர்மனிடம் கோவப்பட்டதாகவும் சில தகவல்கள் பரவிவருகின்றன.
இந்நிலையில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்களை குவித்து 8வது ஒருநாள் சதமடித்து மிரட்டியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு அதிக ஒருநாள் சதமடித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தன்னிடமிருந்து கேப்டன்ஸி பறிக்கப்பட்டது மற்றும் ஸ்மிருதி மந்தனா உடனான மோதலை மையமாக வைத்து தான், தன்னை நிரூபிப்பதற்காக சதமடித்து பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ஹர்மன்ப்ரீத் வென்றிருப்பதாக சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு பிறகான உரையாடலில் எமொசலனாகவும், கோவமாகவும் ஹர்மன்ப்ரீத் இருந்ததற்கு, திரைக்கு பின்னால் ஏதோ நடக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் பரவிவரும் சர்ச்சை தகவல்களுக்கு மத்தியில் ஹர்மன்ப்ரீத் சதமடித்த போது எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் மந்தனா கைத்தட்டும் வீடியோவை பகிர்ந்து, தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று பல ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

