செய்தியாளர் - M.மீரா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா எழுதிய 'Sabr – Finding My Way in Cricket and Life' என்ற சுயசரிதை நூல் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலில் தனது கிரிக்கெட் வாழ்க்கை, இனப் பாகுபாடு, மத அடையாளம், அணிக்குள் எதிர்கொண்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்களை கவாஜா பகிர்ந்துள்ளார்.
இந்த நூலின் 17-வது அத்தியாயமான 'Sandpaper' தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து இதில் பேசியுள்ளார்.
அப்போது அணியில் இருந்த வீரர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டம் தெரிந்திருந்ததாகவும், 3 வீரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டது குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, தனது சுயசரிதை நூலில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவரும் பின்னர் நியூ சவுத் வேல்ஸ் (NSW) அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியவருமான ஆன்டணி ஸ்டூவர்ட் (Anthony Stuart) குறித்து எழுதியுள்ளார் கவாஜா. அவருடன் நல்ல நட்பை உருவாக்க முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்டூவர்ட்டின் பயிற்சி முறை தனக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டூவர்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 15 ஆண்டுகளாக கவாஜா குறித்து தனது நண்பர்களிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து வந்ததாகவும், தற்போது அதை வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயிற்சியின்போதும் பேட்டிங் முடித்த பிறகும், பேட்டிங் பேட்களைக் கழற்றாமல் சுற்றிக்கொண்டிருப்பது, சக வீரர்களுக்குப் பந்துவீசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவது, ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடத் தயங்குவது எனப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதேபோல், ஷெஃபீல்டு ஷீல்டு (Sheffield Shield ) தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடியபோது, தொடக்க வீரராகக் களமிறங்க கவாஜா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சிறந்த வீரர் மூன்றாவது இடத்தில்தான் விளையாட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது வீரராகக் களமிறங்கி 98 ரன்கள் எடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அணியின் பயண உடையை அணிய மறுத்தது உள்ளிட்ட பல சம்பவங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
இறுதியாக, தன்னையும் தனது மேலாளரையும் சமாளிப்பது மிகவும் மோசமான அனுபவமாக இருந்ததாகக் கவாஜா கூறியிருந்தால், அதில் உண்மை இருப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்ட ஸ்டூவர்ட், 'மக்களின் சாம்பியன்' (People's Champion') என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் கவாஜாவின் செயலை விமர்சித்து, 'Enjoy your legacy' என்றும் பதிவிட்டுள்ளார்.