மெஸ்ஸி Reuters
கால்பந்து

FIFA WC 2026 | ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி.. உலக சாதனை சமன்!

2026 FIFA கால்பந்து உலகக்கோப்பையின் முதல் ஹாட்ரிக் (Hat-trick) கோலை அடித்துள்ளார் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸின் 16 கோல்கள் என்ற சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

Premkumar S

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11-ஆம் தேதியன்று கோலாகலமாக தொடங்கியது. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை இத்தொடர் ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் தான், இன்று குரூப் ஜெ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் இடையே லீக் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜெண்டினா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது

அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 2006 ஆம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய நிலையில், 20 ஆண்டுகள் கடந்தும் தனது 6 வது உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்தசூழலில் தான், இந்த உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினாவின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியின் மீது மெஸ்ஸி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பெரும் ஆரவாரத்துடன் ஆட்டம் தொடங்கிய நிலையில், 17, 60 மற்றும் 77 நிமிடங்களில் அடுத்தடுத்து தனது கோலை பதிவு செய்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸி 2026 உலகக்கோப்பையின் முதல் ஹாட்ரிக் கோலை பதிவு செய்திருக்கிறார். அதேபோல, மெஸ்ஸியின் கோல்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) உலக சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

15 கோல்களுடன் ரெனால்டோ, 14 கோல்களுடன் எம்பாப்பே மற்றும் கெர்ட் முல்லர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.