2026 ஃபிஃபா உலகக்கோப்பை முன்னோட்டத்தில், ஃபிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் ஃபேவரட் எனக் கருதப்படுகின்றன. ஸ்பெயின் டிஃபென்ஸ் இதுவரை கோல் விடாமல் வலிமை காட்ட, லமின் யமால் “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஃபிரான்ஸ் எங்களை வெல்லவில்லை; அவர்கள் எங்களை விட வலிமையானவர்கள் அல்ல” என கருத்து தெரிவித்தார். இதற்கு ஜூல்ஸ் கவுண்டே அமைதியான பதில் அளித்து, யமாலின் கருத்தை லைட்டாக எடுத்ததாக கூறியுள்ளார்.
2026 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் அணிகளாக ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, போர்ச்சுக்கல், பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகள் பார்க்கப்படுகின்றன. ஆனால் நடப்பு சீசனை பொறுத்தவரையில் ஃபிரான்ஸ் அணி வலுவான அணியாக திகழ்கிறது. ஒருபுறம் ஃபிரான்ஸ் வலுவாக தெரிந்தாலும், ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட இதுவரை விட்டுக்கொடுக்காமல் தங்களுடைய டிஃபைன்ஸை கோட்டையாக மாற்றி மற்றொரு வலுவான அணியாக உருவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரவுண்ட் 32 நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் - ஆஸ்திரியா மோதலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்பெயின் வீரர் லமின் யமாலிடம் ஃபிரான்ஸ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்ஸ் எங்களைத் தோற்கடித்ததில்லை, அதனால் அவர்களை எங்களை விட வலிமையானவர்கள் என்று கூற முடியாது. அவர்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களிடம் அற்புதமான வீரர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் யாரையும் விட உயர்ந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை” என கூறியிருந்தார்.
இந்தசூழலில் யமாலின் கருத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஃபிரான்ஸ் வீரரும் பார்சிலோனாவில் யமாலின் சகவீரருமான ஜூல்ஸ் கவுண்டே, “எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் மிகவும் வலிமையான வீரர், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஆனால் போட்டியில் அவர்களே ஃபேவரட்டாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்வது பெரிய விஷயமல்ல என்று நினைக்கிறேன். அவர் கூறியது என்னைச் சங்கடப்படுத்தவில்லை, அது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஸ்பெயினுக்கு எதிரான கடைசி சில போட்டிகள் எங்களுக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பது உண்மைதான். அது எங்களுக்கேத் தெரியும், அதனால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை" என்று கூறியுள்ளார்.