நடப்பு FIFA உலகக்கோப்பையில் அசுர ஆட்டம் காட்டும் பிரான்ஸ் அணியின் மைக்கேல் ஒலிஸ், தனது முதல் உலகக்கோப்பையிலேயே வரலாறு படைக்கிறார். ஏற்கனவே 5 அஸிஸ்ட்கள் வழங்கியுள்ள அவர், பீலே ஒரே உலகக்கோப்பையில் செய்த 6 அஸிஸ்ட்கள் சாதனையை முறியடிக்க நெருங்கியுள்ளார். மேலும் மெஸ்ஸியின் 8 அஸிஸ்ட்கள் சாதனையையும் குறிவைத்து முன்னேறுகிறார்.
நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடர் லீக், ரவுண்ட் 32 நாக்அவுட் சுற்றுகள் இரண்டையும் கடந்துள்ளது. கிட்டத்தட்ட எந்த அணி என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. பிரேசில், அர்ஜெண்டினா போன்ற அணிகள் நன்றாக விளையாடுகிறார்கள் என்றால், ஃபிரான்ஸ் அணி அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஃபிரான்ஸ் கோல்களை எளிதாக வலைக்குள் செலுத்திவருகிறது. ஒருபக்கம் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவின் ஆட்டம் தலைசிறந்ததாக இருந்துவரும் சூழலில், மற்ற வீரர்களான உஸ்மான் டெம்பலே, மைக்கேல் ஒலிஸ், பிராட்லி பார்கோலா மற்றும் டெசயர் டூவே என அனைவருமே அணிக்கு அசுரபலத்தை சேர்த்துவருகின்றனர்.
இந்தசூழலில் தான் நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுவரும் மைக்கேல் ஒலிஸ், தன்னுடைய முதல் உலகக்கோப்பையிலேயே பீலே மற்றும் மெஸ்ஸியின் சாதனைகளை உடைக்கும் இடத்திற்கு நகர்ந்துள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் 5 அஸிஸ்ட்களை கொடுத்திருக்கும் ஒலிஸ், ஒரு உலகக்கோப்பையில் 6 அஸிஸ்ட்கள் கொடுத்திருந்த பீலேவின் சாதனையை உடைக்கவிருக்கிறார். மேலும் 8 அஸிஸ்ட்கள் கொடுத்திருந்த மெஸ்ஸியின் சாதனையை உடைக்க இன்னும் 4 தேவையாக இருக்கிறது.
இந்த காலண்டர் வருடத்தில் மொத்தமாக 36 அஸிஸ்ட்களை கொடுத்திருக்கும் ஒலிஸ், ஒரு சீசனில் அதிகபட்சமாக 37 அசிஸ்ட்கள் வழங்கியிருந்த டுசான் டாடிக்கின் சாதனையை முறியடிக்க இன்னும் இரண்டு அசிஸ்ட்கள் மட்டுமே தேவையாக உள்ளது. ஒரு சீசனில் மெஸ்ஸியின் 34 அஸிஸ்ட்கள் ரெக்கார்டை ஏற்கனவே உடைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.