trump - kane web
கால்பந்து

அர்ஜென்டினாவிடம் இங்கிலாந்து தோல்வி.. பயிற்சியாளரை சாடிய டொனால்ட் டிரம்ப்!

கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்த பிறகு, த்ரீ லயன்ஸ் அணியின் பயிற்சியாளர் டுச்செலை கடுமையாக விமர்சித்தவர்களில் தற்போது டிரம்ப்பும் இணைந்துள்ளார்.

Rishan Vengai

ஒரு கோல் முன்னிலையில் இருந்தபோதும் முழு இரண்டாம் பாதி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட டுச்செலின் திட்டம் உலகம் முழுவதும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஹாரி கேனை தற்காப்பு வீரராக மாற்றிய முடிவு தவறு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக சாடியுள்ளார்.

1966ஆம் ஆண்டு முதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணி, 2026ஆம் ஆண்டு நல்ல திறமையான வீரர்களுடன் கனவை எட்டிப்பிடிக்கும் இடத்தில் இருந்தது. 60 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வீட்டிற்கு வரப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு, அர்ஜெண்டினா உடனான அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் பயிற்சியாளர் டுச்செல் கையாண்ட டிஃபன்சிவ் அணுகுமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறுதிப்போட்டிக்கு முந்தைய போட்டியில் முதல் பாதியில் 1-0 என லீட் எடுத்த இங்கிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வலுவான இடத்தில் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் மற்றொரு கோலடிக்க முயற்சிக்காத இங்கிலாந்து அணி முற்றிலுமாக அர்ஜெண்டினாவை கோலடிக்க விடக்கூடாது என்ற டிஃபன்சிவ் அணுகுமுறைக்கு மாறியது.

ஹேரி கேன்

அதிலும் கடைசி அரை மணி நேரத்தில் இரண்டு முன்கள வீரர்களை வெளியேற்றிவிட்டு டுச்செல் தடுப்பாட்ட வீரர்களைக் களமிறக்கினார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் களத்தில் இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. இதனால் கடைசி 10 நிமிடத்தில் வலுவாக கம்பேக் கொடுத்த அர்ஜெண்டினா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 2-1 என வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் 2 கோல்கள் அடித்திருந்தால் கூட தடுப்பாட்டம் ஆடுவதில் நியாயம் உள்ளது, ஒரு கோல் அடித்திருக்கும் இடத்தில் இரண்டாம் பாதி முழுக்க தடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து பயிற்சியாளர் டுச்செல்லின் திட்டத்தை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்தசூழலில் அந்த பட்டியலில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் டிரம்ப், “இங்கிலாந்தில் ஹாரி கேன் என்ற ஒரு சிறந்த வீரர் இருக்கிறார், அவருடன் நான் கோல்ஃப் விளையாடியிருக்கிறேன். அவரை அரையிறுதிப்போட்டியில் ஒரு தடுப்பாட்ட வீரராக மாற்றியதன் மூலம், அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன். கால்பந்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? இருப்பினும் அவர்கள் முன்னிலை பெற்றார்கள், ஆனால் தங்களின் சிறந்த வீரரைத் தற்காப்புப் பகுதிக்கு அனுப்பினார்கள். இது யாரும் செய்யாதது. நாம் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டும், இல்லையா?" என விமர்சித்துள்ளார்.

ஆனால் தன்மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்திருந்த டுச்செல், “இல்லை, என் முடிவைப் பற்றி நான் வருந்தவில்லை. நாங்கள் மிகவும் மந்தமாகிவிட்டதாக நான் நினைத்தேன். அதனால் நான் அணிக்கு உதவவே முயன்றேன்” என கூறியுள்ளார்.