fifa world cup 2026 pt web
கால்பந்து

FIFA | பூமிப்பந்தில் புதிய முத்திரை; கனவுகளுக்கு உயிர்.. உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற குட்டி நாடு!!

கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது கியுரசாவ் கால்பந்து அணி. அதேபோல, கியுரசாவின் பக்கத்து நாடும், ஆயுதமேந்திய குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுமான ஹைதியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

PT WEB

95 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி வரலாற்றில், அடுத்தாண்டு கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக 48 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இது, பூமிப்பந்தின் அனைத்து பகுதியிலும் உள்ள திறமைவாய்ந்த அணிகளுக்கு உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா, 4 முறை பட்டம் வென்றுள்ள பிரேசில் என சர்வதேச கால்பந்தை ஆய்வு செய்தால், தென் அமெரிக்க நாடுகளில், கால்பந்து விளையாட்டு அவர்களின் கலாசாரத்துடன் எந்தளவுக்கு கலந்திருக்கிறது என்பதை உணர முடியும். இதன் தாக்கம் அமெரிக்க கண்டத்தின் பிற நாடுகளிலும் எதிரொலிக்கவே செய்திருக்கிறது.

Curacao foodball team

உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற சிறிய நாடு கியுரசாவ்.,

இந்த நிலையில்தான், மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட வட, மத்திய மற்றும் கரீபியன் நாடுகள், உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்று அசத்தி வருகின்றன. அந்த வகையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை தாங்கி பூரிப்பில் திளைக்கிறது கியுரசாவ். வடக்கு, மத்திய மற்றும் கரீபியன் மண்டலத்துக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு புதிய வரலாறு படைத்திருக்கிறது கியுரசாவ். அதாவது, கோன்காகாஃப் (CONCACAF) நாடுகளுக்கான போட்டியில் பி-பிரிவில் முதலிடம் பிடித்து உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது கியுரசாவ். வலிமைவாய்ந்த ஜமைக்கா அணிக்கு எதிரான போட்டியில் கோலின்றி சமன் செய்ததன் மூலம் பி-பிரிவில் முதலிடம் பிடித்தது. இதனையடுத்து, உலக்கோப்பைக்கு தகுதி பெற்றது. இதனை, வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி களித்தனர்.

நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு நாடாக இருக்கிறது கியுரசாவ். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் மட்டும் தான். இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற குட்டி நாடுகளின் பட்டியலில் மூன்றரை லட்சம் மக்கள் கொண்ட ஐஸ்லாந்தின் முந்தையை சாதனையை கியுரசாவ் முறியடித்திருக்கிறது. இனி, பெரிய பெரிய அணிகளுடன் உலகக்கோப்பை களத்தில் மோத காத்திருக்கிறது கியுரசாவ். உலக வரைபடத்தில் கியுரசாவ் என்ற ஒரு நாடு இருக்கிறது என்பதை கால்பந்து கலாச்சாரம் சர்வதேச நாடுகளுக்கு பிரகடனப் படுத்தியுள்ளது.

haiti foodball team

ஆயுதம் தாங்கிய குழுக்களின் பிடியில் உள்ள ஹைதி!

மற்றொரு புறம், கியுரசாவ்வின் பக்கத்தில் உள்ள ஹைதியும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆயுதம் தாங்கிய கும்பல்களின் பிடியில் சிக்கி, அரசியல் நிலைத்தன்மையற்று இருக்கும் கரீபியன் நாடான ஹைதி, உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உள்நாட்டு பிரச்சினையில் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றதை கொண்டாடி களிக்கிறது ஹைதி. சுமார் ஒன்றரை கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட ஹைதி அணி, தகுதிச்சுற்றில் நிகரகுவா அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்தது.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் ஆயுதமேந்திய கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு குறித்த அச்சத்தால் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாட முடியாத நிலை இருக்கிறது. இதனால், அவர்கள் தங்களது அனைத்து போட்டிகளையும் அண்டை நாடான கியுரசாவில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பயிற்சியாளர் செபாஸ்டியன் மிக்னே, கடந்த18 மாதங்களாக நாட்டிற்குள் செல்லாமல், வெளிநாட்டிலேயே தேசிய அணிக்கு பயிற்சியளித்திருக்கிறார்.

இந்நிலையிலும், வடக்கு, மத்திய கரிபீயின் நாடுகளுக்கான பிரிவில் அற்புதமாக விளையாடி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கிறது ஹைதி. இதன் மூலம் 1974க்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெருமையை ஹைதி பெற்றிருக்கிறது. சில ஆயிரம் பேர் கண்டுகளித்த கியுரசாவ், ஹைதி ஆகிய அணிகளின் ஆட்டத்தை இப்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.