விளையாட்டு

அதிவேக ‘1000’ - உலக சாதனை படைத்த பாக். வீரர் பஹர் ஜமான்

rajakannan

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் படைத்துள்ளார். 28 வயதான ஜமான் வெறும் 18 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவிட் ரிச்சர்ஸ்ட், கெவின் பீட்டர்ஸ்சன், ட்ரோட், டி காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான் 24 இன்னிங்சில் 1000 ரன் எடுத்திருந்தனர்.

பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் 5வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 37 ரன் எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஜமான் 1000 ரன்களை எட்டினார். இந்தப் போட்டியில் பஹர் ஜமான் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியில் இரட்டை சதம் (210) விளாசி இருந்தார்.

பஹர் ஜமான் 1000 ரன்கள் எட்டுவதற்கு ஒரு இரட்டை சதம், 3 சதம், 6 அரைசதம் அடித்துள்ளார். இந்த தொடரில் மட்டும் பஹர் ஜமான் 515 ரன்கள் எடுத்துள்ளார். 

இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார். முதல் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். விராட் கோலி 558 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. அதற்கு 6 இன்னிங்ஸ் விளையாடினார் கோலி. ஆனால், பஹர் ஜமான் 5 இன்னிங்சில் 515 ரன்கள் எடுத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுதான் அதிக ரன்கள் ஆகும்.