Dinesh Karthik & Cook criticized the IPL
விளையாட்டு

IPL-ல் விளையாடாமல் இருக்கலாம்: விமர்சித்த இங்கிலாந்து நட்சத்திரம் - தினேஷ் கார்த்திக் பதிலடி

ஐபிஎல் தொடரை விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு அதே நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார்.

Praveen Joshva L

இந்தியாவில் ஆர்மபிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக உருவெடுத்துள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் வழங்கப்படுவதால் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதையே விரும்புகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் வளரும் வீரரான ஜேக்கப் பெத்தெல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்.

jacob bethell & virat kohli

இதனை குறிப்பிட்டு "Stick to Cricket" பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அலஸ்டர் குக் ஐபிஎல் தொடரை விமர்சித்திருந்தார். ஜேக்கப் பெத்தெலை குறிப்பிட்டு வீரர்கள் பெஞ்ச்சில் உட்காருவதற்குப் பதிலாக இங்கிலாந்துக்குத் திரும்பி வந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது இதே நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தினேஷ் கார்த்திக், வித்தியாசமான காரணத்துக்காக ஐபிஎல் தொடரை தாக்கி பேசுவது நியமற்றது என்றும், ஒரு வீரர், தான் விளையாட ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை, தனக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக எப்படி பாதியிலேயே மதிக்காமல் மீறி வெளியேற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், விளையாட வாய்ப்பு கிடைக்காத போதெல்லாம் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தால், எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் களத்தில் இருக்கும் 11 வீரர்களைத் தவிர வேறு யாரையுமே பெஞ்ச்சில் வைத்திருக்க முடியாது என்றும் அவர் குக்குக்கு பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், உலகெங்கிலும் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை மிகவும் ரசிக்கிறார்கள் என்றும், பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் சீனியர் வீரர்களிடம் பேசுவதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்தை பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களு பகிர்ந்து அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.