மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிஷேக் போரல் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை தனது அணிக்கு ஒப்பந்தம் செய்தது.
தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 32.70 என்ற சராசரி மற்றும் 159.51 என்ற ஸ்ட்ரைக் ரேட்டோடு 327 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு ரஞ்சிக் கோப்பை தொடர்களிலும் சிறப்பாகச் செயல்பட்டார். இதன் காரணமாக இந்திய அணியின் எதிர்கால வீரராக அவர் பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில், அபிஷேக் போரல் மருத்துவ மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் அபிஷேக் போரல் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் திருமணத்துக்கு மறுத்ததாகவும் கூறி கடந்த ஜூன் மாதம் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் மோக்ரா காவல்துறையினர் அபிஷேக் போரல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக அபிஷேக் போரலின் நண்பர் மீதும் புகார் முன்வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்ணை மிரட்டியது தொடர்பான புகாரில் அபிஷேக் போரலை மேற்கு வங்கப் போலீசார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பின்னர் அவர் சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் அபிஷேக் போரலை முன்வைத்து பல்வேறு திட்டங்களை வகுத்துவந்த நிலையில், தற்போது இந்தக் கைது நடவடிக்கை டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.