IPL-ஐ மிஞ்சிய TNPL போட்டி.. சேஸ்செய்யப்பட்ட 240 ரன்கள்.. 40 பந்தில் சதமடித்த மதுரை வீரர்!
2027 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு நடந்த டிஎன்பிஎல் லீக் போட்டியில், கோவை கிங்ஸ் 20 ஓவரில் 239 ரன்கள் குவித்தும், மதுரை பந்தர்ஸ் அசாதாரண ரன் சேஸில் 19.4 ஓவரில் இலக்கை எட்டியது. 40 பந்தில் சதமடித்து 47 பந்தில் 121 ரன்கள் குவித்த என்.எஸ். சதுர்வேத், கேப்டன் பாலசந்தர் மற்றும் அதீக் இணைந்து டிஎன்பிஎல் வரலாற்றிலேயே உயர்ந்த சேஸை பதிவு செய்தனர்.
2027 ஐபிஎல் ஏலம் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், ஏலத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது நேற்றைய TNPL போட்டி. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் மதுரை அணி கோவை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, பாலசுப்ரமணியம் 84 ரன்கள் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த்தின் 87 ரன்கள் ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது.
240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பந்தர்ஸ் அணி, 7 ரன்னுக்கே 1 விக்கெட்டை இழந்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடக்க வீரர் சிதார்த் மகாதேவன் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்த, 3வது வீரராக களத்திற்கு வந்த என்.எஸ். சதுர்வேத் 15 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என நாலாபுறமும் பந்தை சிதறடித்து 40 பந்தில் சதமடித்து அசத்தினார்.
இறுதிவரை களத்தில் நின்ற சதுர்வேத் 47 பந்தில் 121 ரன்கள் அடிக்க, அவருக்கு பக்கபலமாக 19 பந்தில் 37 ரன்கள் அடித்த கேப்டன் பாலசந்தர், 15 பந்தில் 25 ரன்கள் அடித்த அதீக் அனைவரும் அசத்த 19.4 ஓவரில் இலக்கை எட்டிய மதுரை அணி ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. டிஎன்பிஎல் வரலாற்றில் சேஸ்செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். கடைசிவரை பரபரப்பாக சென்ற போட்டி ஐபிஎல்லுக்கு நிகரான சுவாரசியத்தை கொடுத்ததாகவும், டிஎன்பிஎல்லிலும் சிறந்த திறமையான வீரர்கள் இருப்பதை ஐபிஎல் அணிகள் கவனிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

