pune image x page
விளையாட்டு

புனே | ஓப்பனிங் பேட்டிங் செய்த வீரர்.. விளையாடும் போதே மைதானத்தில் நிகழ்ந்த சோகம்!

புனேவில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராத விதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில்கூட, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பீட் தொகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஆந்திராவில் மணமக்களுக்கு பரிசைக் கொடுத்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கார்வேர் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 35 வயது மதிக்கத்தக்க இம்ரான் படேல் என்ற வீரர், தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது, தனக்கு கை மற்றும் மார்பில் வலி இருப்பதாக கள நடுவர்களிடமும் எதிரணியிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மைதானத்தைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் பெவிலியன் திரும்பியபோதே அவர் நிலைகுலைந்தார். இதையடுத்து, மைதானத்தில் இருந்த மற்ற வீரர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே மாரடைப்பு மூலம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தும் அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறந்துபோன இம்ரானுக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். அவர்களில் இளைய மகள் பிறந்து வெறும் 4 மாதங்களே ஆகின்றன. இம்ரான் ஒரு கிரிக்கெட் அணிக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார். தவிர, ரியல் எஸ்டேட் வியாபாரமும் சொந்தமாக ஜூஸ் கடையும் நடத்தி வந்துள்ளார்.

கிரிக்கெட்டிலும் ஓர் ஆல்ரவுண்டராக வலம் வந்துள்ளார். இதேபோல் கடந்த செப்டம்பரில், ஹபீப் ஷேக் என்ற மற்றொரு கிரிக்கெட் வீரரும் இதே புனேவில் ஒரு போட்டியின்போது மாரடைப்பு இறந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது.