டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜிம்பாப்வே icc
கிரிக்கெட்

1000 ரன்களை குவித்த ஜிம்பாப்வே.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை!

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் 3 இன்னிங்ஸிலும் 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டன.

Rishan Vengai

ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்தது. ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது. கிரேக் எர்வின் இரட்டை சதம் மற்றும் வெஸ்லி மதேவெரே சதம் அடித்து அசத்தியது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி பிரெண்டன் டெய்லர் மற்றும் கேப்டன் பிரையன் பென்னட்டின் அதிரடியான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பிரெண்டன் டெய்லர் 131 ரன்களும், பிரையன் பென்னட் 128 ரன்களும் அடித்தனர்.

ஜிம்பாப்வேவை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியும் பதிலுக்கு பதில் என முதல் இன்னிங்ஸில் 514 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் செடிகுல்லா அடல் (105), ரஹ்மானுல்லாஹ் ஜத்ரான் (113), கேப்டன் ரஹ்மத் ஷா (173) ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

10 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 523 ரன்களை குவித்தது. இந்தமுறை 5வது வீரராக களமிறங்கிய கிரேக் எர்வின் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இரட்டை சதமடித்து மிரட்டினார். கிரேக் எர்வின் 203 ரன்கள் அடிக்க, அவருக்கு துணையாக 7வது வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காத வெஸ்லி மதேவெரேவும் 100 ரன்கள் அடித்து அசத்தினார். 3 இன்னிங்ஸிலும் தொடர்ந்து அடிக்கப்பட்டது அரிதான நிகழ்வாக அமைந்தது.

ஆட்டம் சமனில் முடிந்த நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை எழுதியது. இதற்கு முன் எந்த ஒருஅணியும் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 500 ரன்கள் அடித்ததே இல்லை. இன்று அந்தசாதனை தகர்க்கப்பட்டு புதிய வரலாற்றை எழுதியுள்ளது ஜிம்பாப்வே அணி.