வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே அணியை எதிர்த்து 254 ரன்கள் குவித்து டி20 உலகக்கோப்பையில் இரண்டாவது அதிகபட்ச டோட்டலை பதிவு செய்தது. ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்தில் 85 ரன்கள் அடித்து மிரட்டினார். ஜிம்பாப்வே அணியின் கேட்ச் தவறுகள் வெஸ்ட் இண்டீஸின் பிரமாண்ட ரன்குவிப்புக்கு வழிவகுத்தன.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விளையாடிவருகின்றன.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை இங்கிலாந்து இடமும், இந்தியா தென்னாப்பிரிக்கவிடமும் படுதோல்வியை சந்தித்துள்ளன. அதிலும் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரும் காற்றில் கேட்ச் கொடுக்க, கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்டார் ஜிம்பாப்வே ஃபீல்டர்.
அங்கிருந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹெட்மயர் நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டு 19 பந்தில் அரைசதமடித்தார். இது டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் அதிவேக அரைசதமாக பதிவுசெய்யப்பட்டது. 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பந்தாடிய ஹெட்மயர் 254 ஸ்ட்ரைக்ரேட் உடன் 34 பந்தில் 85 ரன்கள் குவித்து மிரட்டினார்.
தொடர்ந்து வந்த ரோவ்மன் பவல் 59 ரன்களும், ஷர்பேன் ரூதர்போர்டு மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் இருவரும் 31, 21 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 254 ரன்கள் என்ற பிரமாண்ட டோட்டலை பதிவுசெய்தது விண்டீஸ் அணி. இது டி20 உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச டோட்டலாக பதிவுசெய்யப்பட்டது. இரண்டுமுறை ஷிம்ரன் ஹெட்மயரின் கேட்ச்சை கோட்டைவிட்டது ஜிம்பாப்வே அணிக்கு பெரிய பாதகமாக அமைந்தது.