ஆஸ்திரேலியா vs யுவராஜ் சிங் pt
கிரிக்கெட்

7 சிக்சர்கள் விளாசல்.. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளுத்த யுவராஜ் சிங்.. 2007 உலகக்கோப்பை Returns!

2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற யுவராஜ் சிங், 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை அதே ஆட்டத்தை ஆடியுள்ளார்.

Rishan Vengai

ஐசிசியின் நாக்அவுட் போட்டிகளில் இந்திய அணியால் வீழ்த்தவே முடியாத ஒரு அணியாக விளங்கியது ஆஸ்திரேலியா அணி. அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி நாக்அவுட் போட்டிகளிலும் வெளுத்துவாங்கிய பெருமை யுவராஜ் சிங்கிற்கே சேரும்.

2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிப்போட்டியில் மோதின. அதில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என 30 பந்துகளில் 70 ரன்களை விளாசிய யுவராஜ் சிங், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார்.

yuvraj singh

அதேபோல 2011 ஒருநாள் உலகக்கோப்பையின் காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. இதில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் சதமடித்து அசத்த 260 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. 2 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவராஜ் சிங், கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி 57 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த இரண்டு உலகக்கோப்பை போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங்கே வென்றிருந்தார்.

yuvraj singh

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் அரையிறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மிரட்டலான ஆட்டத்தை ஆடி இறுதிப்போட்டிக்கு இந்தியாவை எடுத்துச்சென்றுள்ளார் யுவராஜ் சிங்.

7 சிக்சர்கள் விளாசிய யுவி..

சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறும் சாம்பியன் வீரர்கள் விளையாடிவருகின்றனர்.

பரபரப்பாக நடந்துவரும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளன. இதில் முதல் அரையிறுதிப்போட்டியானது சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 7 பவுண்டரிகளை விளாசி 30 பந்தில் 42 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்குபிறகு மிடில் ஆர்டர் வீரராக களத்திற்கு வந்த யுவராஜ் சிங் 7 சிக்சர்களை பறக்கவிட்டு 30 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் மெக்கெய்ன் ஓவரில் 3 சிக்சர்களை விளாசி துவம்சம் செய்தார்.

உடன் பின்னி 36, யூசுப் பதான் 23 மற்றும் இர்ஃபான் பதான் 19 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 220 ரன்களை குவித்தது இந்தியா.

இறுதிப்போட்டியில் இந்தியா..

221 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில், தொடர் முழுவதும் 3 சதங்கள் விளாசி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷேன் வாட்சன் 5 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஷேன் மார்ஸ் மற்றும் பென் டங் இருவரும் தலா 21 ரன்கள் அடித்து வெளியேற ஆஸ்திரேலியா தடுமாறியது. மிடில் ஆர்டரில் சிறப்பாக பந்துவீசிய ஷபாஷ் நதீம் 4 ஓவரில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.

94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணி, பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.