தேர்வுக்குழுவில் ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது; அவர்களுக்கு அங்கே என்ன வேலை? – அப்ரிடி விளாசல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி மட்டுமில்லாமல், அணியின் தேர்வுக்குழுவில் இருக்கும் ஒருவருக்கு கூட கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி காட்டமாக தெரிவித்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியை தலைமையேற்று நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மிகப்பெரிய தொடருக்கான தங்களுடைய மைதானங்களை பலமடங்கு செலவு செய்து தயார் செய்தது. ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் சோபிக்காத பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, மழை காரணமாக கடைசி லீக் போட்டியிலும் விளையாட முடியாமல் போனதால் புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தையே பிடித்தது.
பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் படுமோசமாக விமர்சித்து வருகின்றனர்.
தேர்வுக்குழுவில் இருக்கும் ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது..
சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி "கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அப்ரிடி, “நான் சில நாட்களுக்கு முன்பு லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர்செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது, அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார்.
ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறினார். உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஆனால் பாகிஸ்தான் தேர்வுக்குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை, கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால், அணியும் முன்னேற்றமடையும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.