Yuvraj singh
Yuvraj singh pt desk
கிரிக்கெட்

பாஜக-வில் இணையவிருப்பதாக வெளியான தகவல்! உண்மை என்ன? உடைத்த யுவராஜ் சிங்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணி 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியாவிற்காக தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கும் அவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் பெரிது. கேன்சர் பாதிப்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற யுவராஜ் சிங், அதற்குபிறகு அறக்கட்டளை ஒன்று வைத்து நடத்திவருகிறார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் அரசியலில் குதிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஊடகங்களின் தகவலின் படி யுவராஜ் சிங் பாஜகவில் இணையவிருப்பதாகவும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்காக யுவராஜ் சிங், சமீபத்தில் இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

யுவராஜ்

இந்த நிலையில் இதுதொடர்பாக எதுவும் பேசாமல் இருந்துவந்த யுவராஜ் சிங், தற்போது ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் குர்தாஸ்பூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“எனது லட்சியம் அறக்கட்டளை மூலம் மற்றவர்களுக்கு உதவுவதே!”

பாஜகவில் இணைவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் குர்தாஸ்பூரில் இணைவது குறித்தும் கருத்து தெரிவித்திருக்கும் யுவராஜ் சிங், “ஊடகங்களில் வெளிவந்திருக்கும் அறிக்கைகள் உண்மையல்ல. நான் குர்தாஸ்பூரில் தேர்தலில் போட்டியிடவில்லை. பல்வேறு நிலைகளில் உள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்” என்று யுவராஜ் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டது குறித்து பேசியிருந்த யுவராஜ், “ஒரு பிரான்சைஸ் கிரிக்கெட்டில் உங்களுக்கு வயதாகும்போது, ​கடினமான சூழலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு உரிமையாளரும் எப்போதும் ஒரு இளம் வீரரை ஊக்குவிப்பதற்காக நிறைய மெனக்கிடுகிறார்கள், அது நியாயமானதும் கூட. நானும் கடந்த காலங்களில் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு தான் வந்துள்ளேன். ஆனால் அதேநேரம் அனுபவத்திற்கு மாற்றாக எதுவும் இல்லை என்பதும் உண்மை. ரோகித்துக்கு மிகப்பெரிய அனுபவம் உள்ளது, அவர் அணிக்காக பலநேரங்களில் தன் உழைப்பை வழங்கியுள்ளார். இவை எல்லாவற்றையும் மீறி ஒரு உரிமையாளர் முடிவெடுக்கிறார். உரிமையாளர்கள், எப்போதும் நீண்ட காலத்திற்கு சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதாவது மும்பை அணி கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது போல யுவராஜ் சிங் கூறியுள்ளார்.