SA, ஸ்மிருதி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை | SAவிடம் வீழ்ந்த இந்திய அணி.. சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியிடம் வீழ்ந்தது.

Prakash J

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியிடம் வீழ்ந்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் பேட் செய்ய, பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது.

வழக்கம்போலவே உலகக் கோப்பை தொடரில், இந்த ஜோடி நிலைத்து நிற்கவில்லை. ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், ராவல் 37 ரன்களிலும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அதேநேரத்தில், இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்கள் எடுத்தபோது ஓர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவரான ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னதாக, 1997ஆம் ஆண்டில் பெலிண்டா 970 ரன்கள் குவித்திருந்தார். தற்போது ஸ்மிருதி மந்தனா 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 982* ரன்கள் குவித்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து பின்னால் களமிறங்கிய ஹர்லின் டியோல், கேப்டன் ஹர்மன் பிரீத் ஹவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஆகிய இடைநிலை பேட்டர் வீராங்கனைகளும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

அதேநேரத்தில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் மற்றும் ஸ்நே ரானா இணை, கடைசி நேரத்தில் தாக்குப்பிடித்து நின்று 200 ரன்களைத் தாண்டவைத்தது. இறுதியில் இந்திய அணி, 49.5 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரிச்சா கோஷ் 94 ரன்களும், ஸ்நே ரானா 33 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில், டிரையன் 3 விக்கெட்களையும், காப், கிளர்க், மிலபா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர், 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வால்வார்டட் தொடக்கம் முதலே நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 70 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் இறுதியில் களமிறங்கிய டிரையன் மற்றும் டி கிளர்க் ஆகியோரின் பேட்டிங்கால், தென்னாப்பிரிக்க அணி 48,5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டி கிளர்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.