india womens team x page
கிரிக்கெட்

CWC25 | ஆஸி. தொடர் வெற்றிக்கு முடிவு.. ஒரேநாளில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி.. குவியும் வாழ்த்து!

மகளிர் உலகக் கோப்பை 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, சேஸிங்கில் வீழ்த்தி சாதனை படைத்து இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Prakash J

மகளிர் உலகக் கோப்பை 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, சேஸிங்கில் வீழ்த்தி சாதனை படைத்து இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு நேற்று நிகழ்ந்த ஒரு போட்டியே மீண்டும் உதாரணமாகியுள்ளது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 338 ரன்கள் குவித்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இமாலய இலக்கான, இந்த ரன்களை சேஸ் செய்வது என்பது இந்திய மகளிர் அணிக்கு கடும் சவாலாகவே இருந்திருக்கும். காரணம், இதே தொடரில் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 330 ரன்கள் எடுத்திருந்தும், அந்தப் போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. ஆம், அந்த ரன்களை அதே போட்டியின் அடுத்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கி, இந்தியாவின் வெற்றிக்கு தடை போட்டது. அவ்வளவு ரன்கள் குவித்தே இந்திய மகளிர் அணியால் அந்தப் போட்டியில் ஜெயிக்க முடியவில்லையே என நம் அணி மீதே எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

harmanpreet kaur, jemimah rodrigues,

ஆனால், அதன் வேதனையும் சோகமும் இந்திய மகளிர் அணியினரை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. தவிர, உள்ளூரில் நடைபெறும் போட்டி வேறு; ஆகையால், இந்த வாய்ப்பை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்திய மகளிர் அணி தீவிர வேட்கையில் இருந்தது. அதன் பயனாகத்தான் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து மகத்தான சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இதுவரை 331 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப் பிடித்ததே ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. இதனை தகர்த்து ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய மகளிர் அணி முறியடித்து, சேஸிங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது. தவிர, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த ஆஸ்திரேலியாவுக்கும் நேற்றுடன் இந்திய அணி முடிவு கட்டியது. 2022-2025 வரை தொடர்ந்து 15 ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்த நிலையில், இந்திய அணிக்கு நேற்று அதற்கு முடிவுரை எழுதியது.

25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸின் துடிப்பான ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது. அவர், இந்திய அணியின் வெற்றியை ’தனி ஒருத்தி’யாக தன் தோளில் சுமந்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர், 134 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார். அவர் தன் பங்கிற்கு 89 ரன்கள் எடுத்தார். இருவருடைய நிலையான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிப் பாதை உறுதியானது. இதே ஹர்மன்பிரித் கவுர்தான் 2017ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் ஆஸ்திரேலியாவை ஓடவிட்டார். அதை, கவுர் நேற்றும் நிரூபித்தார். இதன்மூலம், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாகவும், மூன்றாவது முறையாகவும் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்தது. இதை, உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் இந்திய மகளிர் ஆணிக்கு ஆடவர் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடும் அழுத்தத்தின்கீழ் விளையாடிய ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோரின் அதிரடி ஆட்டம் குறித்துப் பாராட்டியிருக்கும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ”அற்புதமான வெற்றி! முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரித் ஹவுர் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஸ்ரீசரணி மற்றும் தீப்தி சர்மா ஆகிய இருவரும் பந்துவீச்சில் ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரப் பறக்க விடுங்கள்" எனப் பாராட்டியுள்ளார்.

அதேபோல் ’கிரிக்கெட் உலகின் தாதா’ என அறியப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ”இந்திய அணியின் வெற்றி, நாட்டில் விளையாட்டுத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்” எனப் பாராட்டியுள்ளார். “பெண்களிடமிருந்து நம்பமுடியாத விஷயங்கள்.. கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக மாறிவிட்டார்கள்.. இன்னும் ஒன்று உள்ளது.. மிகச்சிறந்த @BCCIWomen”எனப் பதிவிட்டுள்ளார்.

இவர்களைத் தவிர ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீரும் பாராட்டியுள்ளார். அவர், “இது இறுதிவரை முடிவடையவில்லை! என்னே அவர்களின் ஒரு செயல்திறன்”எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ’ஹிட் மேன்’ரோகித் சர்மா, ”சபாஷ் டீம் இந்தியா” எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதே வரிசையில் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற யுவராஜ் சிங், “ஸ்கோர்போர்டில் எண்களைத் தாண்டி வெற்றிகள் உள்ளன. இது அவற்றில் ஒன்று. அழுத்தத்தின் கீழ், ஹர்மன் பிரித் கவுரின் உண்மையான தலைவரின் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் விளையாடியதை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் ஜெமிமா வாழ்நாள் முழுவதும் ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்ற தனிக் கவனத்தையும் நோக்கத்தையும் கொண்டு வந்தார். இந்த கூட்டணி அவர்களின் சொந்த ஆட்டத்தின் மீதும், ஒருவருக்கொருவர் மீதும், இந்த அணி எதற்காக நிற்கிறது என்பதிலிருந்தும் என்ற நம்பிக்கையிலிருந்து வந்தது. வெற்றி பெறுவதும் இப்போது இறுதிப் போட்டிக்குச் செல்வதும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதி ஆகும்” எனப் பதிவிட்டுள்ளார்.