ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் twitter
கிரிக்கெட்

World Cup 2023 Finals | ஆடும் லெவனில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

webteam

இந்திய கிரிக்கெட் அணி 3 ஆவது முறையாக உலகக் கோப்பையை நெருங்கியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு கணக்கு தீர்க்கும் போட்டியாகவும் இதை ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனால் அணித்தேர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

india team

ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்றே மந்தமாக ஆடினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணி சுழற்பந்திற்கு தடுமாறுவது அதன் மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக அரையிறுதியில் தென்னாப்ரிக்காவின் தப்ரைஸ் சம்ஷி, கேஷவ் மகாராஜின் பந்துகளை சமாளிக்க ஆஸ்திரேலியர்கள் மிகவும் தடுமாறினர். இதை மனதில் கொண்டு கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் அதாவது அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வின் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மற்ற போட்டிகளில் இவர் விளையாடும் அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது இறுதிப் போட்டியில் அவரை சேர்ப்பதற்கான காரணங்கள் வலுவாக உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 6 ஆவது பந்துவீச்சாளர் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது. மேலும் ஹர்திக் பாண்டியா விலகிவிட்டதால் ஜடேஜாவை தவிர வேறு ஆல்ரவுண்டரே இல்லை என்ற நிலையும் உள்ளது.

Ind vs Aus

எனவே கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் என்ற ரீதியிலும் அஸ்வினின் வருகை பலம் சேர்க்கும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்களில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. எனினும் அஸ்வினை சேர்ப்பது என்றால் சூர்யகுமார் யாதவை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். அது பேட்டிங் வலிமையை குறைக்கும் என்பதால் அவரை நீக்குவது அணி நிர்வாகத்திற்கு கடினமானதாக இருக்கும்.

மேலும் ஆடுகளத்தின் தன்மையையும் கவனிக்க வேண்டியுள்ளது. சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து நன்றாக செட் ஆகியுள்ள நிலையில் அதில் மாற்றங்களை செய்வதற்கும் அணி நிர்வாகம் தயங்கும். இந்தத் தொடரில் இந்திய அணித்தேர்வு சிறப்பாகவே இருந்து வந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியிலும் அது தொடரும் என நம்பலாம்.

புதிய தலைமுறைக்காக - சேஷகிரி