ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் Twitter | @rajasthanroyals
கிரிக்கெட்

IPL Auction: மிடில் ஆர்டரில் உள்ள ஓட்டையை அடைக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

Viyan

ராஜஸ்தான் ராயல்ஸ்

டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்

கடந்த ஏலம் முடிந்ததில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் மீது இருந்த ஒரு விமர்சனம் தேவ்தத் படிக்கலை ஏன் வாங்கினார்கள் என்பதுதான். ஜாஸ் பட்லர், யஷஷ்வி ஜெய்ஸ்வால் என இரண்டு ஓப்பனர்களை ரீடெய்ன் செய்துவிட்டு 7.75 கோடி ரூபாய் கொடுத்து படிக்கலையும் வேறு வாங்கினார்கள். அவரை மிடில் ஆர்டரில் பயன்படுத்த நினைத்த அவர்களின் திட்டம் பின்னடைவைக் கொடுத்தது. அதன் காரணமாக அவர்கள் தேவையான மிடில் ஆர்டர் இடங்களை நிரப்ப முடியாமல் இருந்தது. அதை இம்முறை சரிசெய்திருக்கிறது ராயல்ஸ். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு படிக்கலை டிரேட் செய்து, அங்கிருந்து ஆவேஷ் கானை வாங்கியிருக்கிறது. அதற்குக் கூடுதலாக 2.25 கோடி ரூபாய் செலவளித்திருந்தாலும், அவர்களின் காம்பினேஷனுக்கு இது மிகச் சிறந்த நகர்வாக அமைந்திருக்கிறது.

Rajasthan Royals team

ரிலீஸ் செய்த வீரர்கள்

கடந்த ஏலத்தில் 5.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஜேசன் ஹோல்டரை ரிலீஸ் செய்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். வெளிநாட்டு வீரர்கள் ஜோ ரூட், ஒபெட் மெகாய் ஆகியோரையும் ரிலீஸ் செய்திருக்கிறது. முருகன் அஷ்வின், கேஎம் ஆசிஃப் உள்பட 6 இந்திய வீரர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறது அந்த அணி.

எத்தனை வீரர்கள் தேவை? எவ்வளவு இருக்கிறது?

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 9

ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 17

நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 8

நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 3

ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 14.5 கோடி ரூபாய்

RR

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

1. ஜாஸ் பட்லர்*

2. யஷஷ்வி ஜெய்ஸ்வால்

3. சஞ்சு சாம்சன்

4. ரியான் பராக்

5. ஷிம்ரன் ஹிட்மெயர்*

6.

7. ரவிச்சந்திரன் அஷ்வின்

8. டிரென்ட் போல்ட்*

9. ஆவேஷ் கான்

10. பிரசித் கிருஷ்ணா

11. யுஸ்வேந்திர சஹால்

இம்பேக்ட் பிளேயர்: துருவ் ஜூரெல்

எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?

மேலே இருக்கும் பிளேயிங் லெவனைப் பார்த்தால், இப்படியொரு பௌலிங் யூனிட் எந்த அணிக்கும் இல்லை என்று தோன்றும். நிச்சயம் உண்மைதான். ஆவேஷ் கானை கொண்டுவந்து அவர்கள் பந்துவீச்சை பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறது ராயல்ஸ். அதேசமயம், அவர்கள் மிடில் ஆர்டரில் இருக்கும் பிரச்சனை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதனால் அவர்கள் மீதமிருக்கும் தொகையில் அந்த ஓட்டையை அடைக்க முயற்சி செய்வார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த 2 ஆண்டுகளாக வேன் டெர் டுசன், ஜிம்மி நீஷம், ஜோ ரூட் என யார் யாரையோ முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை. அதனால் தரமான ஒரு டி20 பிளேயரை அந்த அணி வாங்கவேண்டும்.

கடந்த ஆண்டு ஏலத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹேரி ப்ரூக்கை அவர்கள் வாங்க நினைக்கலாம். சன்ரைசர்ஸுக்காக அவர் தடுமாறியிருந்தாலும், சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரை ஃபினிஷராகப் பயன்படுத்தும்பட்சத்தில், அவருக்குப் பிரச்சனையான ஸ்பின்னில் இருந்து அவரை காக்க முடியும். ஒருவேளை ப்ரூக் வேண்டாமென்று நினைத்தால் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை அவர்கள் டார்கெட் செய்யலாம். அவர் ஸ்பின்னையும் சிறப்பாக ஆடக்கூடியவர். அதனால் அவரை 4 அல்லது 5 இடங்களில் ஆட வைத்துவிட்டு, ஹிட்மெயரை வழக்கம்போல் ஆறாவது இடத்தில் பயன்படுத்தலாம்.

RR

இங்லிஸுக்கு மாற்று எனில் டேரில் மிட்செல் போன்ற ஒருவரையும் முயற்சி செய்து பார்க்கலாம். அவர் ஏற்கெனவே ராயல்ஸுக்காக சில ஆண்டுகள் முன்பு ஆடியிருக்கிறார். மிட்செலை வாங்கும்பட்சத்தில் அது அந்த அணிக்கு கூடுதல் பௌலிங் ஆப்ஷனும் கொடுக்கும். அவரது நியூசிலாந்து டீம் மேட்டான ரச்சின் ரவீந்திராவும் கூட அந்த இடத்துக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஒருவேளை இந்த வீரர்கள் குறைந்த விலைக்குப் போனால், இருவரைக் கூட டார்கெட் செய்யலாம். டிரென்ட் போல்ட்டுக்கு ஒரு பேக் அப் வாங்கவேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய திட்டமாக இருக்கும்.